இத்திருப்பதிகம், தில்லைப் பெருமான்மீது கொண்ட காதலால் மெலிகின்றாள் ஒருத்தியது ஆற்றாமையைச் செவிலி அப்பெருமான்முன் சென்று விண்ணப்பித்துக்கொண்டவாறாக அருளிச்செய்யப்பட்டது. இதுவும் அந்தாதியாய் அமைந்தது. இதன்கண் உள்ள திருப்பாடல்கள் இறுதியடி ஒருசீர் குறைந்து வருகின்றன. இவ்வாறு வருதல் இசைப்பாட்டிற்கு இயல்பு. 279. அயல் சார்வது-பக்கத்தில் அணுகி நிற்றல். இது நாள்தோறுமாம். வேலை ஆர்-கடலில் நிறைந்து தோன்றிய. உகந்தீர்-அதனையே அமுதமாகக் கொண்டீர். என்று-என்று இடையறாது கூறி. மால் ஆகும்-பித்துடையவள் ஆகின்றாள். ‘அவளுக்கு அருளல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். அது, பகுதிப்பொருள் விகுதி. வாள் நுதல்-ஒளியையுடைய நெற்றி; இஃது, ஆகுபெயராய். ‘ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்’ எனப் பொருள்தந்தது. ‘‘அயற் சார்வதினால் மாலதாகும்’’ என்றதனால், இறைவரது வசிகரம் விளங்கும். ‘‘விடம் உண்டு உகந்தீர்’’ என்றதனால், ‘அதனினும் நான் கொடியளோ’ என்பது குறித்தாள். 280, கொடி- கொடிபோன்றவள். மிக அற்றனள்-முழுதும் நீங்கினாள். ‘‘இனி’’ என்றதன்பின் ‘விளைவது’ என்பது வருவிக்க. ‘இனித் தெருவில் வந்து உம்மைத் தூற்றுவாள்’ |