‘பல்லாண்டு வாழ்க’ என வாழ்த்தும் வாழ்த்தினை’ ‘பல்லாண்டு’என முதற்குறிப்புப் பெயராக வழங்குவர். அஃது இங்குக் காரியவாகுபெயராய், அவ்வாழ்த்தினைக் கூறுவதாய பதிகத்தைக் குறித்துநின்றது. எனவே, இறைவனை, ‘பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவது இத் திருப்பதிகம்’ என்பது பெறப்பட்டது. இறைவன் என்றும் உள்ளவனாதலின், வாழ்த்துவார் வாழ்த்தும் வாழ்த்தினானாதல், வைவார் வையும் வைவினானாதல் அவனுக்கு வருவதொன்றில்லையாயினும் வெகுளியுற்றார்க்கு அவ்வெகுளி காரணமாக அவனை வைதல் இயல்பாதல்போல, அன்புற்றார்க்கும் அவ்வன்பு காரணமாக அவனை வாழ்த்தலும் இயல்பாதலின், அடைக்கும் தாழ் இல்லாத அவ்வன்பின் செயல் அவர்மாட்டு இயல்பானே வெளிப்படுவதாம். இதனை, இதன் நான்காந் திருப்பாட்டிற் கூறுமாற்றானும் உணர்க. அது நிற்க, கதிரவன் முன்னர்த் தாமரை மலர்தலும், ஆம்பல் குவிதலும் அதனதன் இயல்பானே ஆயவாறுபோல, வாழ்த்தலும், வைதலும் செய்வார் அதுவதற்கேற்ற பயனைத் தம்மியல்பால் தாம் பெறுவார் என அறிக. இத் திருப்பதிகம் அறுசீரடிகளாலாய பாட்டுக்களால் இயன்றது. எனினும், சீர்நிலைமை வரையறையின்றியும், சில அடி சீர்மிக்கும் குறைந்தும் வரப்பெற்றுள்ளது. இது பதின்மூன்று திருப்பாட்டுக்களை உடையதாய் இருத்தல் குறிப்பிடத்தக்கது. 289. இத் திருப்பாட்டின் முதல் அடியின் இருதொடர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கு மங்கல வாழ்த்தாய் நின்றன. மன்னுக-என்றும் நின்று நிலவுக. ‘‘நம் பத்தர்கள்’’ என்றது, ‘நமக்கு |