67


குருபாதம்

திருவிசைப்பாப் பொருள் நலம்

செஞ்சொற் கொண்டல்

வித்துவான், திரு. சொ. சிங்காரவேலன், M.A., Dip. Ling.

கருவூர்த்தேவர்:

‘இந்தப்     பிறவியெனும்  பெருங்கடலில்  விழுந்து      கிடக்கும்
எளியேனுக்கு,  என்னுடன்  பிறந்த ஐம்பொறிகளும் என்   வயப்படுவது
இல்லை;  அவர்களால்  ஆட்டப்பட்டு  ஆழ்கின்றேன் நான்.  அவர்கள்
எம்    பகைவர்கள்.    இவ்வேளையில்   ‘ஆர்   துணை?’    என்று
அலறுகின்றேன்  நான்.  அஞ்சேல்  என்று  ஒரு  குரல்  கேட்கின்றது.
அக்குரல்   என்   உயிர்ப்புள்  உயிர்ப்பாய்,  உணர்வுள்   உணர்வாய்
ஒலிக்கிறது;  திருச்சிற்றம்பலம் என்னும்  திருத்தலத்திலிருந்து  அக்குரல்
வருகிறது.  ஆழ்ந்து  போகும்  அடியேனை  மீளத்  தன்   கருணைக்
கரங்களால் எடுக்கும் வள்ளலின் இனிய குரல் என்னை   வாழ்விக்கிறது.
தில்லைச்  சிதம்பரத்திலே  மற்றொரு காட்சி. வயல்களில்   செஞ்சாலிப்
பயிர்களோடு களைகள் - ஆம்; நீலமலர்ச்  செடிகளே எனினும்  அவை
பயிரை   நோக்கக்   களைகள்   தாமே   -  வளர்ந்து   கிடக்கின்றன.
உழத்தியர்    களையெடுக்கும்போது     அந்நீலமலர்களைப்   பறித்து
எறிகிறார்கள்;   அவை    வயலுக்கு   ஓரமாக   உள்ள  வரப்பின்மீது
விழுகின்றன.   அங்கும்    அவை   நீர்வளத்தால்  காய்ந்து  கருகாது
அரும்பிக் கிடக்கின்றன.

இக்காட்சியும்      என்  வாழ்வுடன்  பெரிதும்  ஒன்றிய  நிலையில்
உள்ளது.   என்    உயிரெனும்   பயிர்க்குக்  களையாய்   முளைத்தன
ஐம்பொறிகள்.  அவ்   ‘ஐம்புலவேடரின்  அயர்ந்து வளரும்’  என்னை,
இறைவனும்  அஞ்சேல்   என்று  கூறிக்  கருணை  புரிந்து,  அவற்றின்
ஆற்றலை யொடுக்கி இனிது வாழ்விப்பான்.

இக்     கருத்துக்களை   யெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது. சைவத்
திருமுறைகளுள்     ஒன்பதாவதாக   விளங்கும்   திருவிசைப்பாவினுள்
கருவூர்த்தேவரின் ஒரு திருப்பாட்டு.1 கருவூர்த்


1.திருவிசைப்பா- பா. 81