ஒருசிறிது தோன்றிய இடையூறுகளை ஆன்றோர் அகற்றிய முறையினைச் சுருக்கமாகக் கூறி மேற்செல்வாம். தமிழ்மொழி தனித்தமுறையில் பிறமொழிச் சொல்லோ எழுத்தோ கலவாது தூய்மையாய் வழங்கவேண்டுமென வரை செய்துள்ளனர். இன்றியமையாது கலக்கநேரின் தமிழ்ஒலிமுறைக்கு ஏற்றவாறு தமிழாக்கிச் சேர்த்துக்கொள்க என்பதும், எக்காரணத்தை யொட்டியும் பிறமொழி எழுத்தக்களை அறவே சேர்த்தல் கூடாதென்பதுமே அவ்வரையறையாம். அது வரும் தொல்காப்பிய நூற்பாவான் உணர்க. "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே." (தொல். சொல். 401.) இதனால் நாம் அறியக்கிடப்பது என்? இந்நாள்போல் அந்நாளிலும் வடவெழுத்துக்களை அவ்வவ்வாறே சேர்த்துத் தமிழைக் கெடுக்க முயன்றாரும் சிலருளரென அறியக்கிடப்பதாம். மேலும் ஒலிப்பெருக்கால் மயக்கி ஆரியத்தை உயர்த்தித் தமிழைக் குறை கூறினாரும், தமிழில் மந்திரங்களில்லை என மயக்குவித்து மயலாயினாரும் பலராயினர் எனத் தெரிகின்றது. அவர்கள் மயலைத் தக்கவாறகற்றியும் மந்திரங்கள் உண்டெனத் தெளிவித்தும் நிலைநாட்டியுள்ள உண்மைத் தமிழ்ச்சான்றோர் இன்றுபோல் அன்றும் உளரெனக் காண வியப்பும் உட்கும் ஒருங்கு விளைகின்றன என்பது வியப்பாமோ! அவை வருமாறு: "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையாற் செந்தமிழே தீர்க்க சிவா." "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான் ஆனந்தம் சேர்க சிவா." (தொல். பொருள். - 490, மேற்கோள்.) இவ்விரண்டு வெண்பாக்களிலும் முடிவு 'சுவா' என்ற பாடந்தான் காணப்படுகின்றன. அதற்குக் கூறப்படும் பொருள் பொருத்தமாகத் தோன்றவில்லை சுவாகா என்னும் சொல் சுவா எனக் குறுகிற்றென்பதேயாம். 'தீர்க்க' 'சேர்க' என்னும் வியங்கோட்களின் பின் இங்ஙனம் நேர்ந்தமை சிவன் செயலே எனக் குறிக்குங் குறிப்பாகவே 'சிவா' என்னும் சொல்
|