பக்கம் எண் :

1344
 

தமிழர்கள் தமிழையும் சரியாகப் படிப்பதில்லை. வடமொழியும் கற்பதில்லை. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளையும் பயில்வதில்லை. ஆதலின், தமிழர்களிடையே எத்தகைய தவறான கொள்கைகளையும் நிலைநாட்டலாம் என்பது சிலருடைய கொள்கையா யிருக்கிறது.

திருமூலருடைய காலமாகிய இராமாயண காலத்தில் இமய முதல் குமரி வரையும் அவ் வெல்லைக்கு அப்பாலும் தமிழே பேசப்பட்டது என்பதை உணர்வார், அவ்வாறு கூறமாட்டார்கள்.

திருமூலர் ஒன்பது ஆகமங்களின் சாரங்களை ஒன்பது தந்திரங்களாகப் பாடினார். இதனை,

"நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே."

என்ற தற்குறிப்புப் பாயிரச் செய்யுளாலும்,

"வந்த மடமஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே."

என்ற சிறப்புப் பாயிரச் செய்யுளாலும் அறியலாம்.

தமிழ்மொழியில் வேதம் சூத்திரமும், ஆகமம் அதன் பாடியமும் போன்றவை. வேதம் பொது. ஆகமம் சிறப்பு. இதனை,

"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல்
ஓதும் சிறப்பும் பொதுவும்என் றுன்னுக
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே."

என்ற தமிழ் மூவாயிரச் செய்யுளால் அறியலாம். ஆரிய வேதம் ஆகமத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

தற்காலம் கிரந்த எழுத்துக்களிலும் நாகரத்திலும் உள்ள ஆகமங்கள் எல்லாம் தமிழ் ஆகமங்களினின்றுமே மொழி பெயர்த்தவையும், வடமொழி கற்ற தமிழர், தமிழ் ஆகமங்களின் சாரங்களை வடமொழியாளர்க்கும் அறிவுறுத்துவான் கருதி எழுதப்பட்டவையுமே தவிர வேறு இல்லை. இவ்வுண்மையைக் காமிகம் முதலிய ஆகமங்கள் பவுஷ்கரம் முதலிய உப ஆகமங்களினுடைய முகவுரையிலிருந்து அறியலாகும்.