தனன். சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அவனை அடக்கினன். எவர்க்கும் காமத்திறம் புறச் சூழ்வால் விளைதல் கூடாது. புறச் சூழ்வால் விளைதல் என்பது வினைக்கு இடையூறாகப் புறப்பொருள்களைக் கண்ட காரணத்தால் மனைநோக்கம் எழுதல் என்பதாம். வினைமுடித்து மனை நோக்குவது அனைவர்க்கும் விழையத்தக்கது. அதற்கிடையே தோன்றும் காம நினைவை அறிவுக் கருத்தால் அகற்றுதல் வேண்டும். அவ்வுண்மையினைச் சிவபெருமான் காமனை உருவிலானாக்கி உணர்த்தியருளினன். நாமெல்லாம் எவ்வாறு காமத்தை அடக்குவதென்பதை ஓதுகின்றனர். எடுத்துக் கொண்ட வினை முடியுங்காறும் அவ்வினைமேல் வைத்த மனத்தை அதன் கண்ணே பொருந்த இருத்துதல் வேண்டும். அங்ஙனம் பொருந்திய உள்ளத்தைக் குறிக்கோளாகிய இலிங்க வழியே செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தினால் காமன் செயலை அடக்குதல் கூடும். சிவபெருமான் காமனை அடக்கி அருந்தவ யோகத்தமர்ந்தது கொறுக்கைத் திருவூர் என்ப. இறைவன் செய்தருளிய ஆண்மைச் செயல்கள் எட்டினையும் குறிக்கும் பழம்பாடல் ஒன்று வருமாறு: பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரமதிகை மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் கொறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில் தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே. மேலோதிய ஆண்மைச் செயல் எட்டினையும் ஒருபுடையாகக் கருதுங்கால் கீழ்வருமாறு கொள்ளலாம். அந்தகன் : உடலுறாது உயிர் மலத்துடன் மட்டும் ஒட்டியிருக்கும் தொல்புலம்பு. தக்கன்: ஆணவச் செருக்கு; இஃது உடலுடன் கூடிய பின் தோன்றுவது. அயன் அரி: யான் எனது என்னும் செருக்கு. சலந்தரன் : கொடுவினை தக்கன் ஆணவச் செருக்கினையும், அயன் அரி, யான் எனதென்னும் செருக்கினையும், சலந்தரன் கொடுவினையையும் குறிக்கும் குறிப்பாதலால், இவை முறையே ஆணவம் மாயை கன்மக் காரணமாகும். முப்புரம் : மும்மல காரியம். அத்தியாகிய யானை : மயக்கம். காலன் : வெகுளி காமன் : காமம். அவ் வெட்டினையும் நினைவூட்டும் வெண்பா வருமாறு : தொல்புலம் பந்தகன் சொல்லா ணவம்தக்கன் மல்யான் எனதயன்மால் வன்மைவினை - வல்ல சலந்தரனாம் மும்மைபுரம் அத்திகாலம் காமன் மலம்வெகுளி காமம்எண் வீறு. மேலும் போர் இருவகைப்படும். அவை புறப்போர் அகப்போர் என்பன. புறப்போர் எதிரியுடன் பன்முறை பொருதுவெல்லல். இது திருவாணை பெற்ற கண்ணன் முதலாயினார் மாட்டுக் காண்க. அகப்போர் எதிர்ப்பும் பொருதலுமின்றி அறியாது வந்த பகைமை அடங்கி ஒடுங்கி அழிவது. அது முழுமுதற் சிவபெருமான் காட்டியருளிய மேலோதிய 'பதிவலியில் வீரட்டம் எட்டு' என்னும் அருளிப் பட்டால் உணரலாம். புறப்போரை ஆற்றற் போரென்றும், அகப்போரை அறிவுப் போரென்றும் கூறுப ஆற்றல்புறப் போரெதிர்ப்புண்டாமறிவுட் போரெதிர்ப்பில், ஆற்றுசிவ வீறெட்டகம். எதிர்ப்பிலாப்போரை 'இரும்புமுகம்' என்னும் புறநானூற்று (309)ப் பாட்டானுணர்க சிவனாராற்றியது எதிர்ப்பில் போரென்க. எதிர்ப்புள் போரைக் சிலப்பதிகாரத்து நீர்ப்படைக் காதையுள் வரும் குறிப்பானுணரலாம் :
|