(ப. இ.) திருவருளால் மிக்கதும் தக்கதுமாகிய சிவபூசையினைத் தண்டேசுரர் முன் தொடர்பால் அறிந்தனர். மண்ணியாற்றிடைக் குறையை நண்ணினர். 'தழைத்ததோர் ஆத்தியின்கீழ் தாபரம் மணலாற் கூப்பினர்.' பிறப்பறும்வகை அங்கே ஆவினை அழைத்து ஐந்தும் நிரம்பிய பாலினைக் கறந்து சிவபெருமானுக்கு ஆட்டி, திருவைந்தெழுத்தோதி நற்றவமாகிய வழிபாட்டினைப் புரிந்தனர். அவர்தம் உடற்றந்தையாகிய எச்சதத்தன் தீ வேள்வியினைப் பெரிதென்று எண்ணும் எண்ணத்தன். அதனால் சினங்கொண்டு பகைத்துச் சிவ வழிபாட்டினைச் சிதைத்தனன். சிவனருளால் மாடு மேய்க்கும் கோல் மழுவாக மாறியது. அதனைக் கொண்டு தந்தையின் தாளைத் தந்தை செய்த திருவடிப்பாவம் அறும்படி வெட்டினர். சிவபெருமான் அவர்க்குத் தொண்டர் தலைமையும் மாலையும் கொடுத்து ஆட்கொண்டருளினன். மறுமழு: மாறுமழு: கோல் மழுவாக மாறியது; மாறு என்பது மறு எனச் செய்யுளால் குறுகி நின்றது. (அ. சி.) உறுவது - சிவபூசையால் வருவது அறுவகை - பிறப்பு அறும்படி.செறுவகை - பகைமை. (5) 338. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நமஎன்று கும்பிட ஈடில் புகழோன் எழுகவென் றானே.1 (ப. இ.) வெவ்வெறு காலங்களில் நஞ்சு முதலிய வெவ்வேறு துன்பங்கள் மால் முதலிய விண்ணவர்களுக்கு நேர்ந்தன. அவர்கள் அப்பொறுக்கலாற்றாத் துன்பத்தால் உயிருக்கு அஞ்சி வருந்தினர். காக்கும் முழுமுதலாம் சிவபெருமானிடம் ஒருங்கு கூடி வந்து ஓலமென்று மொழிந்து முறையிட்டனர். அத் தேவர்களது முகவாட்டங் கண்டு சிவபெருமான் இரங்கினன். ஒப்பில்லாத புகழையுடைய அவன் எழுக என்று அருளினன். அத் தேவர்கள் மீண்டும் இறைவாநம என்று கும்பிட்டனர். இத் தலைப்பின் கீழ் முறையே அம்மை, அன்பர், அயன்மால், இராவணன், தண்டேசுரர், அமரர்கள் ஆகிய அறுவரும் சிவபெருமானை வழிபடும் தவத்தால் நற்பேறு பெற்றனர். ஒருபுடையொப்பாக மேலோதிய அறுவர் நிகழ்ச்சியாலும் இறைவன்தன் ஆறு குணங்களையும் நினைவு கூர்க. அக்குணங்கள் வருமாறு: மெய்ப்பொருள். ஆண்மை, புகழ், திரு, ஞானம், பற்றறுதி. பற்றறுதி - வைராக்கியம் இக் குறிப்பை வரும் வெண்பாவால் நினைவு கூர்க: இவற்றை ஐசுவரியம், விரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் எனவும் கூறுப. மெய்ப்பொருளாம் அம்மை மிளிராண்மை மெய்யன்பர் வெய்யபுகழ் மாலயன் மேவுதிரு - ஐந்நான்கு தோளான் சிவஞானம் சண்டேசர் பற்றறுதி மாளாமற் காக்கவிழை வான்.
வான் - வானவர். (6)
1. ஒருங்களி. சம்பந்தர், 1 . 43 - 4.
|