பக்கம் எண் :

254
 

(ப. இ.) கூடமாகிய உடலின்கண் குடிபுகுந்து மங்கையராகிய பிங்கலை இடைகலை என்னும் வலப்பால் இடப்பால் நாடிகள் வாயிலாக உயிர்ப்புப் பன்னிரண்டுவிரல் அளவு ஓடுதலும் மீளுதலும் புரியும். அப்பன்னிரண்டு விரலுள் எண்விரல் அளவு எடுத்துக்கொண்டு நான்குவிரல் அளவு வீணாக வெட்டி அவை வாணாளென்று எண்ணாது போக்கிவிடுவர். அந் நால் விரலளவும் நாளும் அகத்தே கூடிக்கொள்ளின் மிகப்பெரும் வைப்பாகத் திகழும். அதன்மேல் பயிற்சியால் பெருகி மூலபண்டாரம் சாலமிகும். மிகவே அவ்வுயிர் திருநீறு சிவமணி அணிந்தார்தம் புறக் கோலம் போன்று உணர்வின்கண் 'சிவசிவ' என்னும் செந்தமிழ் மறைக்கோலமாய் உறையும். உறையவே கூற்றுவனும் நாட அஞ்சுவன். அஞ்செழுத்தாமே - உயிர்க்கிழவன் 'சிவசிவ' என்னும் திருவுருவனாவன்.

(அ. சி.) கூடம் - சரீரம். மங்கையர் - இடைகலை; பிங்கலை. எண். விரல் கண்டிப்பர் - பிராணவாயுவைப் பன்னிரண்டங்குலமுள்ள பொருளாகக் கொண்டால் பூரகம் எட்டங்குலப் பிரமாண முள்ளதாகும். நாலங்குலம் வந்து கூடாது. கால்விரல் - 16 மாத்திரையுள்ள பூரகத்தின் கால்பாகமாக உள்ள நாலங்குலம். கூடிக்கொளின் - 64 மாத்திரை அளவுள்ள கும்பகத்தாலும் 32 மாத்திரை அளவுள்ள இரேசகத்தாலும் நாலங்குலம் கூடிக்கொண்டால்.

(12)

558. பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.

(ப. இ.) வெளிச்செல்லும் உயிர்ப்பு மாத்திரை பதினாறனுள் இயல்பாகவே நான்கு மாத்திரை உயிர்ப்புப்புறமே வீணாகக் கழிந்துபோக அகத்தே பன்னிரண்டு மாத்திரைதங்குகின்றது. அதுதானும் பின்னும் உயிர்ப்பினைக் கழிப்பதற்கே காரணமாகத் தங்குகின்றது. இப் பன்னிரண்டு மாத்திரை உயிர்ப்பினைப் பன்னிரண்டானை என்றனர். இவை பாகனாகிய ஆருயிர்க்கு அடங்குதல் நன்றாகும். அங்ஙனம் அடங்கின் நாளெல்லை, விழிப்பு உறக்கம், தோற்ற ஒடுக்கம், அறிவு அறியாமை எனப்படும் பகல் இரவுகள் இல்லை. அவ்வியானையினை அடக்குமுறையினைப் பாகனாகிய உயிர் அறிந்திலது. அதனை ஆருயிர் அறிந்தபின் எய்தவே மேலோதிய பகல் இரவுகளில்லை.

(அ. சி.) பன்னிரண்டானைக்கு - 16 மாத்திரையில் நாலு மாத்திரையை விட்டு விட்டு 12 மாத்திரையை மாத்திரம் பூரிப்பவருக்கு பாகன் - ஆன்மா.

(13)