(ப. இ.) ஆறுநிலைகளுக்கும் அப்பாற்பட்ட அருள்வெளிக்கு உரியவன்மேலை நிலத்தினாள். இதுவே பற்றுக்கோடில்லா நிலை. இதனைச் சார்பில்நிலை எனவும் கூறலாம். இதுவே நிராதாரம். அவளே மெய்யுணர்வுச் செல்வி. மூலாதாரத்திலுள்ள திருவருள் திருவுருவினையுடையவன் சிவன். அத்திருவருளைத் திருமேனியாகவுடைய சிவபெருமானை எழுப்புதல் வேண்டும். எழுப்பித் திருவருளுடன் கூடச்செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்யவே அவ் வுயிர் என்றும் இளமையாகவே இருக்கும். 'என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே' என்றழைக்கப் படுதற்கும் உரிமையுண்டாகும். வேதகப் பெண்பிள்ளை என்பதற்கு வேறுபாட்டினைச் செய்கின்றவள் என்றலும் ஒன்று. மூர்த்தியை எழுப்பி என்பதற்குப் பாப்பிருக்கைக் குண்டலியை எழுப்பி என்றுரைத்தலுமாம். இவளுடன் சந்திக்க என்பதற்கு அவள் செல்லும் உச்சித்துளைவழிச் சென்று சிவபெருமானைக் கண்டு கும்பிட எனலுமாம். வேதகப் பெண்பிள்ளை - (இரும்பைப் பொன்னாக்கும்) வேறுபாட்டினைச் செய்யும் திருவருள். மூர்த்தியை ஏல எழுப்பி - (பாம்பின் வடிவமாகிய குண்டலி) ஆற்றலை முறைப்படி துயிலினின்றெழுப்பி. இவளுடன் சந்திக்க - அவள் செல்லும் உச்சித்துளைவழிச் சென்று முழுமுதற் சிவனைக் கும்பிட.. (அ. சி.) மேலை நிலைத்தினாள் - நிராதாரத் தானத்திற்குரிய மன உன்மனி. வேதகப்பெண் - வேதத்தைக் கைக்கொண்ட சத்தி. மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தி - விநாயகர் அல்லது அந்தமில் சத்தி. (3) 571. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்கு உடையாமல் ஊழி இருக்கலு மாமே. (ப. இ.) உயிர்ப்புப் பயிற்சியால் மூலவழியினை அடைத்து உயிர்க்காற்றை எழுப்பி, புருவநடுவாகிய இடைவாசலை இனிது நோக்கித் துனியின்றியிருத்தல் வேண்டும். இருக்கவே நனிமிகு இன்பம் உண்டாம். பின் செவ்விருந்துணையும் கொக்குப்போல் குறிக்கொண்டு நிற்றல் வேண்டும். செவ்வி வாய்த்ததும் திருவருள் வீழச்சியாகும். அதன் பொருட்டு இவ் வுடலகத்துப் பல வூழிகள் நிலையாக இருக்கலுமாகும். கால் - உயிர்க்காற்று (பிராணவாயு). கொக்குப்போல் - தக்ககாலம் பார்க்கும் கொக்கைப்போல. வந்தித்திருப்பார்க்கு - செவ்வி (மலபரிபாகம்) வருந்துணையும் திருவருளையுன்னி இடையறாது திருவைந் தெழுத்தையெண்ணி வணங்கியிருப்பார்க்கு. உடையாமல் - இறவாமல். ஊழி - பலகோடி ஆண்டுகள். (அ. சி.) கடைவாசல் - மூலத்துவாரம். இடைவாசல் - வீணாத் தண்டினுள் சுக்கிலம் புகும் வழி. (4) 572. கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.
|