பக்கம் எண் :

265
 

(ப. இ.) புருவநடுவினை உற்றுப்பார்த்தலால் மெய்யுணர்வு ஒளி வெளிப்படும். அகக்கண்ணால் பார்த்துக் கலந்திடுதல் வேண்டும். அங்ஙனம் வெளிப்படவே திருவருள் வெள்ளப்பெருக்குப் பள்ளமடையாப் பெருகும். அவ்வருள்வெளியினைக் கண்டு ஆர்வத்துடன் ஓடிச்சென்றால் ஆக்கப்பாடாகிய காரியநிலை எய்தாது என்றும் காரணமாய் முழுமுதலாய் நிற்கும் சிவபெருமானைக் காணுதலும் பேணுதலும் பேரின்பம் பூணுதலும் உண்டாம். பண்ணாமல் நின்றது - தானேயாம் தூய சிவம். பார்க்கலும் - உணர்த்த வுணர்ந்து வழிபடலும்.

(அ. சி.) ஒண்ணாம் நயனம் - ஞானக்கண். விண்ணாறு - ஆனந்தக் கண்ணீர்.

(3)

581. ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.

(ப. இ.) திருவருள் நாட்டத்தில் ஒருபொழுதேனும் உடலுயிர்ப் பண்பை நினையார். அதுபோல் உயிருக்கு உயிராய் உயிருள் விளங்கும் சிவனை நினையார். ஒரு பொழுதேனும் அச்சிவனுறை தவமார் உள்ளத்தை நினையார் அதுபோல் உச்சித்துளைமேல் தோன்றும் திருவருள் வெளிக்கண் காணப்படும். திங்களனைய தூய வெண்ணிறத் தாமரைப்பூ தோன்றும்; அதனையும் நினையார்.

(அ. சி.) சந்திரப்பூ - ஆஞ்ஞையிலுள்ள சந்திரன் போன்ற வெண்ணிற ஒளி.

(4)

582. மனத்து விளக்கினை மான்பட எற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

(ப. இ.) திருவருள் நினைவால் மனத்து விளக்கினை மயக்கமாகிய மான்பட ஏற்றுதல் வேண்டும். அதனால் வெகுளியைக் கண்டு விலகுமாறு செய்தல்வேண்டும். ஏனைக் கருவி கரணங்களை வழிப்படுத்தி நன்றாய் விளங்குமாறு தூண்டுதல் வேண்டும். தூண்டவே காமம் அகலும். மான் - மூலப்பகுதி; அறியாமை. இவற்றால் 'காமம் வெகுளி மயக்கங்கள்' நீங்கும். அப்பொழுது மனத்துவிளக்கு மாயாவிளக்காகும். மான் - மூலப்பகுதி (ஈண்டு அவித்தை). அனைத்துவிளக்கும் - அறிதற்காம் புலன் கலன்கள். (புலன் கருவி. கலன் - கரணம்.) மாயாவிளக்கு - அணையா விளக்கு.

(அ. சி.) மான் - அவிச்சை. திரி - அறிவு.

(5)

583. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.


1. இல்லக. அப்பர், 4. 11 - 8.