பக்கம் எண் :

539
 

இவர்களனைவரும் சூழ்ந்துவர இடப்பால் திகழும் விரிந்த இதழ்களையுடைய நெஞ்சத் தாமரையின்கண் வீற்றிருந்தருளும் அம்மை மூல முதலாகிய ஆறு நிலைக்களங்களையும் கொண்டு தோன்றியருள்வள்.

(97)

1391. கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே.1

(ப. இ.) கூத்தனார் ஒளியினைக்கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கும் திருவருளம்மையை அகத்தவமுடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருளம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகுடல் பொருள்களெல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான் மறைகளெல்லாம் அம்மையின் அடியிணையை எங்கணும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக்கொண்டு என்னை ஆண்டருளினள் என்க.

(அ. சி.) காரணத்துள்ளது - எவற்றிற்கும் காரணமாயுள்ளது. இல்லடைந்தாளுமே - குடியாகக்கொண்டு எனை ஆளும்.

(98)

1392. இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கு இல்லாதில் லானையே.2

(ப. இ.) என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருளம்மையின் திருவடியைப் பெற்றவர் இல்லடைந்தாராவர். அத்தகைய திருவடியில் லடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகை யோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப்பயன்சேர் இமையவரும் ஒப்பாகார்; தாழ்ந்தவரேயாவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம், அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க. ஈற்றடியில் இல்லாதில்லானையே என்பதை : இல் + ஆன் + ஐ = புகலிடமாக ஆனாகிய உயிர்கட்கு ஐயாகிய தலைவன் சிவபெருமானாவன். இல்லாதில் - அதனால் இல்லாத பொருள் ஏதும் இல்லை.

(அ. சி.) ஆன் ஐ - விடையை வாகனமாக உடைய சிவன்.

(99)

1393. ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை
ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.


1. பண்டைமறை. சிவஞானசித்தியார், மெய்கண்டார் வாழ்த்து.

2. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.