11. அவையடக்கம் 127. ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை ஆரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.1 (ப. இ.) ஒரு பொருளின் பெருமையைக் கூறுவார், அப்பொருளின் தன்மைகளை முற்றும் ஆராயும் அறிவு, ஆற்றல், ஆண்மை முதலியவற்றான் மிக்காராய்; ஒழுக்கம், வாய்மை, தூய்மை முதலியவற்றில் தக்காராய்க் கடவுள்நாட்டம் கைக்கொண்டொழுகும் சான்றோராயுள்ள உயர்ந்தாராவர். அனைத்துலகினுக்கும் அனைத்துயிர்கட்கும் முதன்மைக் காரணராயுள்ள முழுமுதற் சிவன் அண்ணல் எனப்படுவன். அவற்கு உயர்ந்தாரும் ஒத்தாரும் எவருமிலர். யாண்டும் தாழ்ந்தாரே உளர். கடல்நீர் முற்றும் கொள்ளத்தக்க பாசனம் - கலம் ஒன்றிருந்தாலன்றி அந்நீரின் பெருமையை அளத்தல் ஒண்ணாது. கடல்நீர் மூன்று மடங்கு பெரியது உலகத்தைவிட என உலகியலுணர்ந்தாருரைப்பர். ஆயின், அதனை அளக்கும் கருவி உலகத்தில் ஏதும் இன்று என்பது துணிபு. கடலுள்வாழ் உயிர்களும் மேற்செல்லும் கலன்களும் அக் கடலின் ஒருபுடை யடங்குவனவே. அதுபோல் ஆண்டவன் பெருநிறைவினனாதலின் எல்லாம் அவன்கண் அடங்குவனவே. ஆதலால் எங்கள் அண்ணல் பெருமையை யாரறிவார் என்றனர். ஒன்றின் பெருமையை அளந்தறிய உளங்கொள்வார் அதன் அகலம், நீளம், ஆழம், உயரம் முதலியவற்றை யன்றே அளப்பர். அங்ஙனம் அளப்பின் அப்பொருள் ஓர் எல்லையில் அடங்கும். சிவபெருமான் 'மறையினால், அயனால், மாலால், மனத்தினால், வாக்கால் மற்றும், குறைவிலா அளவினாலும் கூற' வொண்ணாதவனாகலின் எல்லையிலான் எனப்பட்டான். ஆதலால் அவனது அகலமும் நீளமும் அறிவார் ஒருவரு மிலர். உலகத்தையும் உயிர்களையும் விட்டு நீங்காத ஒட்டியுறைகின்ற செம்பொருட் பெருஞ்சுடர் சிவன். அவன் ஒருவனாகிய ஒப்பில்லாதவனாய் இருக்கின்றான். அவனது வேராகிய அடிநிலைத் தன்மையைக்கூட அறிய முடியாத யான் அருள் உணர்த்தக் கடல்நீர் கொண்ட கலம்போல் உணர்த்துகின்றேன். பேரறியாத - பெயர்ந்தறியாத. அடிநிலைத் தன்மை: சிவனே உள்நின்று செய்தும் - செய்வித்தும் வருகின்ற ஆதிகாரணத் தன்மை. அதனை அவனருளால் உணர்வதன்றிச் சோதித்தல் வேண்டா என்பதனை வருந்திருமுறையான் உணர்க: 'ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீ ரிறையே வந்து சார்மின்களே.' (சம்பந்தர், 3. 54-5) (1)
1. மறையினால். சிவஞான சித்தியார், அவையடக்கம் - 4.
|