பக்கம் எண் :

554
 

நிருவாண தீக்கையாவது அறுவை வழியாகிய மந்திரம், பதம், வன்னம், தத்துவம், புவனம், கலை என்பனவற்றைத் தூய்மைப்படுத்தலாகும். வழியறு வகையின் வாய்மை வருமாறு : 1. அப் பால்நிலையில் ஒப்பில் அறிவு ஒருசிறிதும் விளங்காது புலம்புற்றுக்கிடந்த ஆருயிர்கட்கு அறிவு விளங்கி அழுந்தி அறிதலாகிய நுகர்வு உண்டாகும்பொருட்டு நுண்ணோசை முதல் செவியோசை ஈறாகிய மொழிகளைத் தோற்றுவிக்கும் கருவிகள் கலையாகும். 2. அம் மொழிகளால் ஆருயிர்கட்கு அழுந்தியறிதல் உண்டாகும்படி முயற்சிக்கும் கருவிகள் மெய்யாகும். மெய் - தத்துவம். 3. அம் முயற்சியால் கண்டும் கேட்டும் அறியப்படும். புலனுகர்வுக்குரிய இடம் உலகமாகும். உலகம் - புவனம். 4. அம் முயற்சியால் கண்டும் கேட்டும் அறிந்தவற்றின் இயல்புகளையும் அவற்றைப் பெறுதற்குரிய வழிவகைகளையும் உள்ளவாறு உணரும்படி பயிலத்தக்க அறிவுக் கருவியாகிய செந்தமிழ் மறைமுறைகள் எனப்படும் வேதாகமங்களாகிய நூல்கள் எழுத்தெனப்படும். எழுத்து - வருணம். 5. அத் தமிழ் வேதாகமங்களாகிய மறைநூல் முறைநூல்களால் அறியப்படும் நுகர்வுகள் நிலை எனப்படும். நிலை - பதம். 6. அந் நிலைக்கண் வழுவாதொழுகி உய்தற்கு விழுமிய முழுமுதல் வழிபாடு இன்றியமையாததாகும். அவ் வழிபாட்டிற்குத் திருவுருவ அமைப்பு உயிர் போன்றதாகும். திருவுருவம் படிமம் எனவும் படும். அத் திருவுரு சொல்லுருவும் பொருளுருவும் என இருவேறு வகைப்படும். அவற்றுள் பொருளுருவினும் சொல்லுருவே நனிமிகச் சிறந்ததாகும். சொல்லெனினும் மறை எனினும் ஒன்றே. மறை - மந்திரம். அது 'நமசிவய' 'சிவயநம' எனப்படும் இவ்வழிபாட்டுத் திருவுருவங்களே மந்திரம்.

இவற்றைத் தூய்மைப்படுத்தலென்பது, பயன் வேண்டிச் செய்யப்படும் செயலனைத்தும் தொழில் எனப்படும். சிவனடிமை என்னும் தெளிவுடன் செய்யப்படும் செயல் அனைத்தும் தொண்டெனப்படும். ஆருயிர்கள் முன் தொழிலாகச் செய்யப்பட்ட வினைப்பயன்கள் இவ் ஆறு வழிகளிலும் அமைந்து கிடக்கும். அவற்றை மாற்றி மேல் செய்வன அனைத்தும் தொண்டாமாறு விதித்து நிறுத்தல். 'தோற்று பயன் வேண்டல் தொழில் சிவத்தால் வேண்டாமை, ஆற்றுதொண்டாக்கலாம் ஆய்ந்து' என்பதனையும் நோக்குக. மேலும் 'ஓசைமெய்யோடுலகம் ஓங்குநூல் துய்ப்புநிலை, ஆசில்வழி பாட்டுமறை ஆறு' என்பதையும் நினைவுகூர்க. ஓசை - கலை. மெய் - தத்துவம். ஞான தீக்கை என்பது மேலோதிய மூன்றனையும் செய்விக்கும் உரிமை நல்குவதாகிய ஆசிரியத் திருமுழுக்கு என்னும் அபிடேகமாகும்.

(அ. சி.) இம் மந்திரம் சைவத்திலுள்ள தீக்கைகளை விவரிக்கின்றது: சமயம் - விசேடம் - நிருவாணம் - அபிடேகம்.

(7)