பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை1002

பிரபந்தங்களின் வகைகள்

இத்திருமுறையில் காணப்பெறும் பிரபந்தங்கள் அந்தாதி, இரட்டைமணிமாலை, உலா, கலம்பகம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை எனப் புதுவதுபுனையும் யாப்புப் பற்றியும், வெண்பா, விருத்தம், கலிவெண்பா எனச் செய்யுள் வகை பற்றியும், காரெட்டு, ஒருபா ஒருபது, ஏகாதசமாலை, திருஈங்கோய்மலை எழுபது என எண் பற்றியும், ஆற்றுப்படை கோபப் பிரசாதம், திருமறம், திருமுகப்பாசுரம் திருத்தொகை எனப் பொருள் வகை பற்றியும், பெருந்தேவபாணி என இயலிசை பற்றியும் பெயர் எய்தியனவாகும்.

அருளாசிரியர்கள்

இப்பிரபந்தங்களைப் பாடிய அருளாசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடதேவர், கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக்கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பெற்ற அடியவர்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரிவாகச் சேக்கிழார் பெருமானால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும், சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

அருளாளர்களாக இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள் பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

பதினொன்றாம் திருமுறைப் பகுப்பு

திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்ற சோழமன்னன் இராஜராஜ அபயகுலசேகரனின் வேண்டுகோட்படி மூவர் அருளிய தேவாரத்திருமுறைகள் இருக்குமிடத்தை அறிவித்து அவற்றுக்குத் திருநீலகண்ட