பக்கம் எண் :

307திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

11. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

470.வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்,நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

1


470. மும்மணிக் கோவையின் இலக்கணம் மேல், திருவாரூர் மும்மணிக் கோவை உரையில் காட்டப்பட்டது.

குறிப்புரை: திருவலஞ்சுழி காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்று.

‘நெஞ்சே,’ வலஞ்சுழி அண்ணலது அடியே வணங்குதும்; வாழி’ என இயைத்து முடிக்க. கருமுகிற் கணம் உடன் புணர்ந்து பொரு கடல் முகந்து மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்து இழி அருவி குண கடல் மடுக்கும் காவிரி’ எனவும் இயைக்க.

உடன் புணர்ந்து - ஒரு சேரச் சேர்ந்து. பொரு கடல் - அலையால் கரையைத் தாக்குகின்ற கடல். கடல், அதன் நீரைக் குறித்தமையால் ஆகுபெயர். மின்னல் தோன்றிய உடன் இடி முழக்கம் கேட்கும் ஆதலால் அதனை அறிந்த பாம்புகள் புற்றில் ஒடுங்குபவாயின. குடவரை - மேற்கு மலை; சைய மலை. பொழிந்து - பொழிதலால். ‘மணிகளைக் கொழித்து’ எனக் கொழித்தற்குச் செயப்படுபொருள் வருவிக்க. குண கடல் - கீழ்க்கடல். ‘கடலை மடுப்பிக்கும் - உட்கொள்விக்கும் காவிரி’ என்க. “காவிரி” என்றது அவ்யாற்றினை. அதனை அறம் வளர்க்கும் மடந்தையாக உருவகித்து, கடலைப் பசித்து நிற்கும் இரவலனாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம். காவிரியினது நீரால் சூழப்பட்டமையின் மணி நீரை உடைய வலஞ்சுழியாயிற்று” மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி”1 என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார். காவிரி யாறு


1. திருமுறை - 2.106.1