பக்கம் எண் :

377திருமுருகாற்றுப்படை

அடி-130, 131: சீரொடு - அழகோடு கூடியதாக. வலம்புரி புரையும் வால் நரை முடியினர் - நிறத்தால் சங்கினோடு ஒப்ப நரைத்த வெள்ளிய நரையான முடியை, வடிவாலும் சங்கு போலத் தோன்றும் படி முடிந்த முடியினை உடையவர்களும்.

அடி-132: மாசு அற இமைக்கும் உருவினர் - (பன்முறை நீரின்கண் மூழ்குதலால்) அழுக்குப் போக விளங்கும் மேனியை உடையவர்களும். (“மாண்டார் நீராடி”1 என்றார் திருவள்ளுவரும். சமண் முனிவர் இதற்கு மாறாக உடம்பில் மாசு பூசுபவர்கள்)

அடி-132, 133, 134: மானின் உரிவை தங்கிய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - மான் தோலால் போர்க்கப்பட்டதும், தசை வற்றியதும் ஆகிய மார்பில் எலும்புகள் வெளித் தோன்றி அசையும் உடம்பினை உடையவரும்.

அடி-134, 135: நன் பகல் பல உடன் கழிந்த உண்டியர் - நோன்பினால் ’நல்ல நாள்’ எனப்படும் நாள்கள் பல தொடர்ந்து சென்ற பின்னர் உண்ணும் உணவை உடையவர் களும். (எனவே, ‘பல நாள் உண்ணாதவர்கள்’ என்றதாம். பட்டினி விட்டுப் பின்பு உண்டல் ‘பௌர்ணை’ எனப்படும்.)

அடி-135, 136: இகலோடு செற்றம் நீக்கிய மனத்தினர் - யாரிடத்தும் மாறுபாட்டினையும், அது காரணமாக உள்ளத்தில் நிற்கும் பகைமை உணர்வையும் நீக்கின மனத்தை உடையவர்களும்.

அடி-136, 137: கற்றோர் யாவதும் அறியா அறிவினர் - கல்வியை முற்றக் கற்றவர்கள் சிறிதும் அறியாத மெய்யறிவினை உடையவர்களும்.

அடி-137, 138: கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் - ‘கற்றோர்’ என்பவரது பெருமைகட்கெல்லாம் தாம் மேல்வரம்பாகிய தலைமைப்பாட்டினை உடையவர்களும். (‘கல்வியைக் கரை கண்டவர்’ என்றபடி.)

அடி-138, 139: பலவகை ஆசைகளையும், கடிதாகிய வெகுளியையும் அறவே போக்கின அறிவை யுடையவர்களும்.

அடி-139, 140: (“இன்பம் விழையாது, இடும்பையை - இது வருதல் இயற்கை2 - என்று எண்ணி அமைதலால்) உள்ளத்தில் சிறிதாயினும் துன்பம் தோன்றியறியாத இயல்பினை உடையவர்களும்.


1. திருக்குறள் - 278.

2. “ - 628.