பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை386

அடி-232: மன்றமும் - அவை கூடுகின்ற அம்பலமாகிய மர நிழலிலும் (அவன் உறைவான்) பொதியிலும் - வழிப் போவார் தங்குதற் பொருட்டு அறமாக அமைக்கப் பட்ட பொது இல்லங்களிலும் (அவன் உறைவான்) கந்து உடை நிலையிலும் - (தறியை உடைய நிலையங்களிலும் (அவன் உறைவான். தறியாவது சிவலிங்கம் இது வட மொழியில் ‘தாணு’ எனப்படும் இஃது உள்ள நிலையங்களில் முருகன் அம்மை அப்பர்க்குப் பிள்ளையாய் இருப்பான். தறி சிவலிங்கம் ஆதலிய, “கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”1 என்னும் அப்பர் திருமொழியால் அறிக. ஆதீண்டு குற்றி யுள்ள இடத்தில் முருகனை வழிபடுதல் காணப்படாமையால் “தறி” என்பதற்கு, ‘ஆ தீண்டு குற்றி’ என உரைத்தல் பொருந்துவதன்று.)

அடி-248: குற மகள் - இளையளாகிய குறத்தி. (முதியளாயின் ‘மூதாட்டி’ எனப்படுவாளல்லது வாளா “மகள்” எனப்படாள்.)

அடி-233: மாண் தலைக் கொடியோடு அமை வர மண்ணி, மாட்சிமைப் பட்ட, தலைமையை யுடைய கோழிக் கொடியோடு பொருந்துதல் வரத் தூய்மை செய்து. (‘ஆண்டலை’ எனப் பாடம் ஓதி, ‘ஆண்டலையாவது கோழி’ என்று உரைப்பாரும் உளர்.)

அடி-234: ஐயவி நெய்யோடு அப்பி - வெண்சிறு கடுகை (மணம் மிகுதற் பொருட்டு) நெய்யோடு கலந்து நிரம்பப் பொருத்தி.

அடி-235: கொழு மலர் சிதறி - செழிப்பான மலர்களை எங்கும் இறைத்து.

அடி-237: வெண் பொரி சிதறி - வெண்மையான பொரிகளையும் இறைத்து.

அடி-238, 239, 240: மத வலி நிலைஇய மா தாள் கொழு விடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில் பலிச் செய்து - செருக்கும், வலிமையும் நிலை பெற்ற, பருத்த கால்களையுடைய செம்மறியாட்டுக் கிடாயினது இரத்தத் தோடு சேர்த்துப் பிசைந்த, தூய, வெண்மையான அரிசியைச் சிறு படையலாக வைத்து. பல் பிரம்பு இரீஇ - பல இடங்களில் பிரம்புகளை நாட்டி. (பிரம்பு, பிரப்பங் கூடைகளும் ஆம். அவற்றில் பண்டங்கள் நிரம்பியிருக்கும்.

அடி-241: சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - (அரைத்த, சிறிய பாடம் செய்யப்படாத பச்சை மஞ்சளோடே நல்ல மணம் கலந்த நீரை எங்கும் தெளித்து.

அடி-242, 243: பெரு தண் கணவீர நறு தண் மாலை துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - பெரிய குளிர்ந்த செவ்வலரிப் பூவால் ஆகிய, மணம் கமழும் குளிர்ந்த மாலைகளை ஓர் அளவாக


1. திருமுறை - 6.61