1072. | அணங்(கு),ஆ டகக்குன்ற மா(து),அற ஆட்டிய வாலமர்ந்தாட்(கு) இணங்கா யவன்தில்லை யெல்லை மிதித்தலு மென்புருகா வணங்கா, வழுத்தா விழாவெழும் பாவைத் தவாமதர்த்த குணங்காண் இவளென்ன வென்றுகொ லாம்வந்து கூடுவதே. | | 51 |
1073. | கூடுவ(து) அம்பலக் கூத்த னடியார் குழுவுதொறும்; தேடுவ(து) ஆங்கவ னாக்கமச் செவ்வழி; யவ்வழியே ஓடுவ(து) உள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே. | | 52 |
1072. குறிப்புரை: இது தலைவியது கைக்கிளைக் காதல் ஆற்றாமை கண்டு தோழி மனமழிந்து கூறியது. ஆல் - திருஆலங்காடு தலம். அதில் அமர்ந்தவள் காளி. அவளை "அணங்கு" என்றதனோடு, சத்தி கூறாதல் பற்றி, "ஆடகக் குன்ற மாது" என்றார். 'பொன்மலை மகள்' என்பது அதன் பொருள். அற ஆட்டிய - தன்னை (சிவனை) மிகவும் ஆடச் செய்த. "இறைவனை - ஆடல்கண்டருளிய அணங்கு" என முற்கால ஆசிரியரும் கூறினார். அவளை ஒறுத்து அடக்காமல், இனிய நடனத்தினாலே வென்று அடக்கினமை பற்றிச் சிவபெருமானை "அவளுக்கு இணங்கியவன்" என்றார். தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம் ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ1 என்னும் திருவாசகத்தைக் காண்க. வழுத்தல் - துதித்தல். பாவை, தலைவி. 'பாவை, தில்லை எல்லை மிதித்தலும் என்பு உருகா ... எழும்; (ஆகவே, தில்லைப்பிரான் இவளை) - இவள் மதர்த்த குணம் - என்ன (இரங்கி) என்று வந்து கூடுவது' என இயைத்து முடிக்க. தவா - நீங்காத; மதர்த்த - களித்த; பித்துக் கொண்ட குணம் உடையவளை, "குணம்" என்றார். காண், கொல், ஆம் அசைகள் "உருகா" என்பது முதலாக எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள் யாவும் "எழும்" என்னும் முற்றோடு முடிந்தன. 1073. குறிப்புரை: 'பிறவி வீடுவதாக நினைய வல்லோர் செய்யும் வித்தகம் அடியார் குழுவு தொறும் கூடுவதும், அவன் ஆக்கும் செல்வழி தேடுவதும், அவ்வழியே ஓடுவதும், ஒண் சுடரை உள்ளத்து இருத்துவதும் 'ஆம்' என இயைத்து முடிக்க. "ஆக்கும்" என்பது இறந்த காலத்தில் வந்தது. சிவன் ஆக்கிய செவ்விய வழியாவது சிவாகம
1. திருச்சாழல் - 14.
|