பக்கம் எண் :

873ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1270.வளைபடு தண்கடற் கொச்சை வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே.

89

1271.முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை, யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.

90

1272.அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினைஅன்(று)
உடைத்தது பாணன்தன் யாழி னொலியை; யுரகவிடம்
துடைத்தது; தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.

91



1270. குறிப்புரை: இப்பாட்டு, புதல்வனை வாயிலாகக் கொண்டு போந்த தலைமகன் 'யான் தவ றொன்றிலேன்' எனக் கூறியவாறே கூறி வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

வளை படு கடல் - சங்குகள் உண்டாகின்ற கடல். வளைபடும் முடி - வணங்குதல் பொருந்தும் முடி. அம்குவளை படு கண்ணியர் - அழகிய குவளைப் பூப்போலும் கண்களை யுடைய மகளிர்; பரத்தையர் வளைபடுகிங்கிணி - வளைத்துக் கட்டப்பட்ட சதங்கை. 'மைந்தன் வாயினின்றும் பெறப் படுகின்ற முத்தத்தில் ஊரனது வாய்நீரிலே சில மகளிரது பலவாகப் பொருந்திய பொதுத் தம்பலம் நாறாநின்றது' என்க. 'அவன் தவறிலன் என்பது யாண்டையது' என்பது குறிப்பெச்சம். மணி - சிறப்பு. இப்பாட்டு, 'மடக்கு' என்னும் சொல்லணி பெற்று வந்தது.

1271. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை.

'அவரினும் பாதம் அடைந்தவர்க்கு எங்கள் பிரானை அணைதல் எளிது' என முடிக்க. கண்டீர், முன்னிலை யசை. அத்தன் - தலைவன். 'சம்பந்தனைப் பாதத்தை அடைந் தவர்க்கு' என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு சிறுபான்மை வந்தது.

1272. குறிப்புரை: "தோணிபுரத்துக்கு இறைவன்" என்பதனை முதலிற் கொள்க. 'துடைத்தது உரக விடம்' எனவும், 'நள்ளாற்றரசு வணித்திடச் சுடரொளிவாய்ப் படைத்து தண்மையை எனவும் கூட்டுக. ஒளி - நெருப்பு; ஆகுபெயர்.