பக்கம் எண் :

927ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

90.

கேதகையும், சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த

மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில்


91.

இருவேலி தன்னை இடையிருத்தி, ஈண்டு

மருவோடு மல்லிகையை வைத்(து) ஆங்(கு) - அருகே


92.

கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்

பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்


93.

புன்னாகந் தன்னைப் புணர இருவாட்சி

தன் அயலே முல்லை தலை எடுப்ப - மன்னிய


94.

வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப, மௌவல் அலர் படைப்பத்

தண் குருந்தம் மாடே தலை இறக்க - ஒண்கமலத்


95.

தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்

போதடுத்த கோலம் புனைவித்துக் - காதில்கண்ணி - 90 - 95 ஞானசம்பந்தருக்குத் தலைக்கோல மாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள். கேதகை - கைதை; செந்தாழை. மாதவியின் போது - வனமல்லிகைப் போது. கோதில் - குற்றம் இல்லாத. இரு வேலி - வெட்டி வேர். ‘இரு வேரி’ என்பதே பாடம் என்பாரும் உளர். மரு - மருக் கொழுந்து. மல்லிகை - நாட்டு மல்லிகை. கரு முகை - கருங்குவளை அரும்பு. கழுநீர் - செங்கழு நீர். முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற. புன்னாகம் - புன்னை மலர். ‘இருள் வாசி’ - என்பது மருவி, ‘இருவாட்சி’ என வழங்கப்படுகின்றது. ‘நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது’ என்பது ‘இருள்வாசி’ - என்பதன் பொருள். இது குறிஞ்சிப் பாட்டுள் “நள்ளிருள்நாறி”1 எனச் சொல்லப்பட்டது. ‘புன்னாகந் தன்னை இருவாட்சி புணர’ என்க. முல்லை - நாட்டு முல்லை. மௌவல் - காட்டு முல்லை. “செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்” என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடையதாதல் விளங்கும். இதனை, ‘செம்பருத்தி’ என்றல் பொருந்தாது. குருந்தம் - குருந்த மரப் பூ. மாடு - பக்கம். ‘கமலக் கண்ணி’ என இயைத்து ‘தாமரை மலரால் ஆகிய முடி மாலை’ என உரைக்க. தாது - மகரந்தம். குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர். போது - பேரரும்பு. கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள். மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.


1.அடி - 94.