த
ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள்
வரலாறு
தருமபுரத்தில் ஆதீனம் கண்டார்:
ஆசிரியர் ஆணையை மறுத்தற்கு அஞ்சியவராய்க்
கன்றைப் பிரிந்த பசுப்போல வருந்தும் குருஞானசம்பந்தரை நோக்கிக் “குருவாரந்தோறும் வந்து நம்மைத்
தரிசிப்பாய்” என்று தேறுதல் கூறினார் ஞானப்பிரகாசர்.
குருஞானசம்பந்தர் தம் குரு ஆணையைச்
சிரமேற்கொண்டு தமது ஆன்மார்த்த மூர்த்தியுடன் தருமபுரத்திற்கு எழுந்தருளி, தருமபுர ஆதீன மடாலயத்தை
நிறுவியருளினார். ஞானாநுபூதியில் திளைத்துப் பல பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவஞானோபதேசம் செய்து
அநுபூதிச் செல்வராய்த் திகழ்ந்தார். அவர் அநுபூதியில் பொங்கித் ததும்பிப் பூரணமாய் எழுந்த
சிவஞானப் பேரருவியே சிவபோக சாரம், சொக்க நாத வெண்பா, முத்தி நிச்சயம், திரிபதார்த்த
ரூபாதி தசகாரிய அகவல், சோடசகலாப் பிராசாத ஷட்கம், சொக்கநாதக் கலித்துறை, ஞானப்பிரகாசமாலை,
நவமணிமாலை, ஆகிய எட்டு நூல்கள் ஆகும். பாடல்கள் எளிமையும், இனிமையும் பயப்பனவாய், பதி,
பசு, பாசம் என்ற முப்பொருளுண்மையைத் தெளிய விளக்குவனவாய் உள்ளன.
ஆனந்த பரவசருக்கு உபதேசம்:
குருஞானசம்பந்தர் தம்மை அடைந்த
பக்குவமுடையவர்களுக்கு உபதேசித்து அநுபூதிமானாக விளங்கும்போது, உபதேச பரம்பரையை வளர்த்துவர
அதி தீவிர பக்குவ நிலையிலிருந்த ஆனந்த பரவசருக்கு உபதேசித்துத் தாம் ஜீவசமாதி
கூடியருளினார்கள். அதிதீவிர நிலையில் இருந்த ஆனந்தபரவசர் தமது குருநாதர் உபதேசித்த ஞானநிலை
விரைவில் கூடியவராய், தம் ஞானாசாரியர் ஜீவசமாதி கூடிய ஸ்ரீ ஞானபுரீசுவரர் ஆலய விமான ஸ்தூபியைத்
தரிசித்தவாறு நிட்டை நிலை கூடினார்கள்.
மீண்டும் எழுந்தருளினார்:
அதுகண்ட ஏனைய சீடர்கள்
குருமரபு விளங்க வேண்டுவதை ஆசாரியர் திருமுன் சென்று விண்ணப்பிக்க, பரமாசாரிய மூர்த்திகள்
ஜீவசமாதியினின்றும் எழுந்து வந்து ஸ்ரீ சச்சிதானந்த தேசிகருக்கு உபதேசம் செய்து அநுபூதிநிலை
வருவித்து ஞானபீடத்து இருத்தி வைகாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சப்தமி திதியில் தாம் முன்போல்
ஜீவசமாதியில் எழுந்தருளினார்கள்.
|