பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
444

17

வரைவு முடுக்கம்

17.5 பழிவரவுரைத்துப் பகல் வரவுவிலக்கல்

   
பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல் என்பது இவ்விருளிடை வாராதொழிகென்றது பகல்வரச் சொன்னவாறா மெனவுட்கொண்டு, பகற்குறிச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டுப் பகல் வந்து எமக்குச் செய்யாநின்ற மெய்யாகியவருள் புறத்தாரறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதாநின்றது; இனிப் பகல்வர வொழிவாயாகவெனப் பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

254. களிறுற்ற செல்லல் களைவயிற்
        பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
    பிளிறுற்ற வானப் பெருவரை
        நாட பெடைநடையோ

_____________________________________________________________

17.5.  ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே லண்ணலைப்
      பாங்கி ஐய பகல்வர லென்றது.


   
இதன் பொருள்: களிறு உற்ற செல்லல் பெண் களைவயின் - அசும்பின் கட்பட்டுக் களிறுற்ற வருத்தத்தைப் பிடி தீர்க்கின்ற விடத்து; மரம் கைஞ் ஞெமிர்த்துப் பிளிறு உற்ற வானப் பெருவரை நாட - மரத்தைக் கையான் முறித்துப் பிளிறுதலை யுற்ற வானத்தைத்தோயும் பெரியவரையையுடைய நாடனே; பெடை நடையோடு ஒளிறு உற்ற மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் - அன்னப்பெடையினது நடைபோலு நடையையுடையாளொடு கூடி விளங்குதலை யுற்ற மேனியையுடையவனது சிற்றம்பலத்தை நெஞ்சா லுறாதாரைப் போல யாமிடர்ப்பட; வெளிறு உற்ற வான் பழியாம்-வெளிப் படுதலையுற்ற பெரிய பழியாகாநின்றது; நீ பகல் செய்யும் மெய் அருள்-நீ பகல்வந்து எமக்குச் செய்யும் மெய்யாகியவருள் எ-று.

   
மெய்யருளென்றது மெய்யாக வருளுகின்றாயேனு மென்றவாறு. வழியல்லாவழிச் சேறலான் அசும்பிற் பட்ட களிற்றினை வாங்குதற்குப் பிடி முயல்கின்றாற்போல, இவளை யெய்துதற் குபாயமல்லாத விவ்வொழுக்கத்தினை விரும்பு நின்னை இதனினின்றும் மாற்றுதற்கு யான் முயலாநின்றேனென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கி வரைவு கடாதல்.

254