19 - 22: நிறை.................................காண்குவர்
(இ-ள்) நிரை நீர்
கயத்துள்-நிறைந்த நீரையுடைய மடுவின்கண்; தாமரை-செந்தாமரையானது; ஒருநாள் நின்று
தவம் செய்து-ஒரு காலில் நீண்ட காலம் நின்று தவம் செய்து; அன்புடன் பெற்ற திருமகட்கு-அன்போடு
பெற்ற திருமகளை ஒத்த இவளுக்கு; அடுத்தது என் என்று ஒருமை காண்குவர்-இப்பொழுது பொருந்திய
வேறுபாடு என்ன என்று நொதுமலர் எல்லோரும் கூடி ஐயுற்று ஆராய்குவர்; அதனால் நீ ஆற்றி
இருத்தல் வேண்டும் என்க.
(வி-ம்.)
துகிர்க் கிளைக் கொடியே என்பது முன்னர்க் கூட்டப்பட்டது. திருமகள் தலைவிக்குவமை.
வாளா திருமகளென்னாது கயத்துள் ஒருதாள் நின்று தாமரை தவம் செய்து அளியுடன் பெற்ற
திருமகள் என்றமையால் இவளையும் இவள் தாய் தந்தையர் பெரிதும் தவம் செய்து பெற்றனர்
என்பது கருத்தாகக் கொள்க. கயம்-மாடு. அளி-அன்பு. அடுத்தது-உண்டாகிய வேறுபாடு. ஆதலால்
நீ ஆற்ற வேண்டும் என்பது குறிப்பெச்சம். இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்-தலைமகளை
ஆற்றுவித்தல்
இதனை,
கொடியே நீ மாந்தர்க்கு ஈதற்பொருட்டுக் காடு கடந்து சென்ற நம்பெருமான் பொருட்டுப்
பழங்கண் கொண்டால் நொதுமலர் இவள் பெரும்பதி கூறார் கிளைபோல வருந்துதற்கு இவட்கு
நேர்ந்தது என்னை என்று ஆராய்ந்து அலர் தூற்றுவர், ஆதலால் ஆற்றுக என வினை முடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|