எப்பொழுதும் மலர்ந்தும்;
அமுதம் நின்று உறைந்தும்- தங்கண் அமிழ்தம் ஒழியாமல் பொருந்தப்பட்டும்; அறிவு அறிவித்தும்
- தன் கருத்தினை மெய்ப்பாட்டால் உணர்த்தியும்; தீக்கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
- தீப்பிழம்பாகிய கதிரவன் உடலில் சென்று மறையாதிருந்தும்; தாரைகள் திளையா விண்மீன்களோடு
கூடிச் சேராமலும்; முளையா-(பகலில் அழிந்து) இரவில் தோன்றாமலும்; வென்றி கொண்ட
இவள் முகமதிக்கு - இவ்வாற்றால் இத்திங்களை வெற்றிகொண்ட இவள் முகமாகிய திங்களுக்கு
என்க,
(வி-ம்.)
முண்டகம்-தாமரை. திங்களில் வானோர் உண்ணுதலால் அமுதம் குறைவதாம். இவள் முகத்தில்
அங்ஙனம் குறைவதில்லை என்பான் அமுதம் நின்று உறைந்தும் என்றான். திங்கள் உயிரில்
பொருள், இவள் முகமதி உயிரும் உணர்ச்சியும் உடைத்து என்பான் அறிவறிவித்தும் என்றான்.
இவள் திங்கள்போல் தீயோருடன் சேர்தல் இலள் என்பான் தீக்கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
என்றான். தாரை- தாரகை. இவள் இழிந்தாரோடு சேர்தலிலள். திங்கள் இழிந்தாரோடு
கூடும் என்பான், தாரகை திளையா சேரா என்றான். முளையா என்றது அழிந்து தோன்றாத என்றவாறு.
சேராத முறையாத எனல்வேண்டிய பெயரெச்சங்களின் ஈறுகள் தொக்கன.
இனி,
குறைமதி மனனே! இவள் முகமதிக்கு, கூடற் பெருமான் கழற்படையால் தக்கன் யாகசாலையாகிய
செருக்களத்தில் நிலனொடு தேய்ப்புண்டலறிச் சிதைந்தெழுந் தீமதியாகிய நிறைமதி புரையாது
புரையாது என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|