இக்கிணற்று நீர் இளநீரைப் போன்று அருமையான சுவையுடைதாக விளங்குகிறது. உள் வாயிலைக் கடந்ததும் இடப்பால் அருணகிரிநாதரின் திருமேனியும் அவர் இத்தலத்துப் பாடியுள்ள திருப்புகழும் காணப்படுகின்றன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியிடத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. அதற்குப் பக்கத்தில்தான் விநாயகர் சந்நிதி உள்ளது. அதுபோலவே சுப்பிரமணியர் சந்நிதியும் உரிய இடத்தில் இல்லாமல் சற்று முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சந்நிதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி உள்ளது. பக்கத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி உள்ளது. அறுபத்துமூவர் முழுவதுமில்லை. சில திருமேனிகளே உள்ளன. பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. அடுத்து நால்வர் பிரதிஷ்டை, பைரவர், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டும் தெற்கு நோக்கிய தரிசனம். கோஷ்ட மூர்த்தமாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலியோர் காட்சியளிக்கின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. துவாரபாலகர்களை வணங்கி உள் சென்றால் கம்பீரமாக மூலவர் காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுரபீட ஆவுடையார். கருவறையின் உள் இடம் விசாலமாகவுள்ளது. பழைய அம்பாள் பின்னமாகிவிட்டதால் புதிய அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனினும் பழைய அம்பாளை வெளியேற்றி விடலாகாதென்று அத்திருமேனி மூலவருக்குப் பக்கத்தில் மூலையில் வைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி - நின்றநிலை - அழகான தோற்றம். ஒரே இடத்தில் நின்று சுவாமியையும் அம்பாளையும் ஒருசேரத் தரிசிக்கும் நிலையில் இரு சந்நிதிகளும் அமைந்துள்ளன. சித்திரைப் பௌர்ணமியில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. “கடலின் நஞ்சம் அமுதுண்டு இமையோர் தொழு தேத்த நடமாடி அடல்இலங்கை அரையன் வலிசெற்று அருள் அம்மான் அமர்கோயில் மடல்இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம் உடல்இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத் துயர் போமே” (சம்பந்தர்) |