பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 151


     இறைவன் - ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர்.
     இறைவி - ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி.
     தலமரம் - ஆலமரம்.
     தீர்த்தம் - நிவாநதி.

     மூவர் பாடல் பெற்ற தலம்

     வான்மீகி முனிவர், அரவான் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது.
முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வலப்பால் விநாயகர், சமயக்குரவர்கள்
நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான
லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து
அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன்,
தண்டாயுதபாணி சந்நிதிகளையும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில்
உள்ள இலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும்
விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர்,
சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன.

     வெளிச் சுற்றில் தரிசித்துக் கொண்டு உள்ளே சென்றால் இடப்பால்
நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்குச் சந்நிதி உள்ளது. சுவாமிக்கும்
அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

     நிவா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்தபோது, அதனாற்
சேதமுண்டாகாதிருக்க நந்தி தலையைத் திரும்பிப் பார்க்க வெள்ளம்
வடிந்ததாம். அதனால் நந்தியின் தலை சற்றுத் திரும்பியுள்ளதாகக்
கூறப்படுகிறது.

     கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவர், பிரம்மா உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை,
அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே
சென்றால் மூலவரைத் தொழலாம்.

     மூலவர் சுயம்பு. கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்திற்குத் ‘தீர்த்தபுரி’
என்ற பெயரும் இருப்பதால் இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயரையும்
பெறுகிறார்.

     நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தலபுராணம்
ஏதுமில்லை.