பக்கம் எண் :

160 திருமுறைத்தலங்கள்


     தலமரம் - கல்லால மரம் - தற்போது இல்லை.
     தீர்த்தம் - (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்) சங்கமத்
               தீர்த்தம்.

     பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன்
நர்த்தனவல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

     சுந்தரர் பாடல் பெற்றது.

     பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கிழக்கு
நோக்கிய சந்நிதி. கொடிமரம் பலிபீடம் இல்லை. நந்தி உள்ளது. வெளிச்
சுற்றில் பக்கவாயில் உள்ளது. நடராச சபை உள்ளது.

     அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள்
முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். இத்தேவி
மிகவும் சக்திவாய்ந்த அம்மை என்று மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.

     மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே
சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி
உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சிவலிங்க திருமேனி,
சுவாமிக்கு வலப்பால் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற
திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது.

     இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சிறப்பானது - சித்ரகுப்தர் ஒரு
கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சி தருவது.
இம்மூர்த்தம் பிற்காலத்தில் பிரார்த்தனையாக ஒருவரால் செய்து
வைக்கப்பட்டதாகும்.

     இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு
வரும்போது வலப்பால் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இரு அம்பாள்
சந்நிதிகளில் - பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும் ஞானசக்தி அம்பாள்
சந்நிதியில் குங்குமமும் தரப்படுகிறது. மதிலின் வெளிப்புறத்தில் அகத்தியர்
சிற்பம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்,
பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி
எதிரில் உள்ளது.

     இக்கோயில் நல்ல நிலையில் உள்ளது. இதன் பரம்பரை அறங்காவலர்
தேவகோட்டை அருணாசலம் செட்டியார் அவர்களாவார். நாடொறும்
மூன்றுகால பூஜைகள்.