பக்கம் எண் :

192 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - அதுல்ய நாதேஸ்வரர், ஒப்பிலாமணீசுவரர்,
               அறையணிநாதர்.
     இறைவி - சௌந்தர்ய கனகாம்பிகை, அருள் நாயகி,

             அழகிய பொன்னம்மை.
     தீர்த்தம் - பெண்ணையாறு

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     கற்கோயில், ஒரு சிறிய பாறைமீது உள்ளது. ராஜகோபுரம்
ஏழுநிலைகளுடன் கூடியது. முகப்புவாயிலின் முன் கல்தூண்கள் உள்ளன.
திருப்பணி நடந்து பல்லாண்டுகள் ஆயின. பிராகாரத்தில் வலம்புரிவிநாயகர்
- தலவிநாயகர் உள்ளார். இவ்வுருவம் பெரிய கல் ஒன்றில் வடிக்கப்பட்டு
உள்ளது. எப்படிப் பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போலத் தோன்றுகிறது.
இதன் முன்பு இடப்பால் தாள மேந்திய நின்றகோலத்தில் ஞானசம்பந்தர்
திருமேனி உள்ளது.

     இங்குள்ள முருகன் திருமேனி மிகவும் அற்புதமான அமைப்புடன் -
அதாவது ஒருமுகம் ஆறுகரங்களுடன் காட்சியளிக்கிறது. கைகளில்
ஆயுதங்கள் உள்ளன. வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக்
காட்சி தருகிறார். இது சூரசம்ஹாரமூர்த்தியாகும்.

     விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாதலிங்கம் உள்ளது. கருவறை மிகப்
பழமையானது. மூலவர் - சிவலிங்கம் மிகவும் பழைமையானது. சுயம்பு என்று
சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. அகழி அமைப்புடைய கருவறை,
அடிப்பாகம் கல்லாலும் மேற்புறம் (கோபுரம்) சுதையாலும் ஆனது.
பிராகாரத்தில் சனிபகவான், காகத்தின் மீது ஒருகாலை வைத்தூன்றிய
கோலத்தில் காணப்படுகிறார். நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள
நாராயணர், நர்த்தன கணபதி, நீளமான கல்லில் வடித்துள்ள மகாவிஷ்ணு
சக்கரதாரியாக நின்றநிலை முதலிய சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள்
வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். நடராசசபைக்கு எதிர்வாயில்
உள்ளது. சம்பந்தர், வலம்புரி விநாயகர் காட்சி தருகின்றனர்.

     வெளிச்சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி
தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. நான்கு திருக்கரங்களுடன் கூடிய
நின்ற திருக்கோலம்.

     நீலகண்ட முனிவர் என்பவர் முதலில் இங்கு வழிபட்டுப் பூசித்த பிறகே
இக்கோயில் உண்டாயிற்று என்று கூறப்படுகிறது.