பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 201


     3. இத் தலம் விழுப்புரம் - கடலூர் புகைவண்டிப் பாதையில் உள்ள
புகைவண்டி நிலையம்.

     சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம். ‘சிவஞானசித்தியார்’ என்னும்
சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்)
அவதரித்து வாழ்ந்த தலம். இவருடைய சமாதிக்கோயில் உள்ளது. நாரதர்,
வசிட்டர், அகத்தியர், வீமன், சூரியன் முதலியோர் வழிபட்டபதி. இக் கோயில்
பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. ஊர்
சிறியது.

     சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு, இன்று
வடபால் ஓடுகிறது. பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில்
தென்பால் உள்ளது.

     இறைவன் - சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்.
     இறைவி - சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.
     தலமரம் - கொன்றை.
     தீர்த்தம் - சூரிய தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.

     சுந்தரர் பாடியது.

     இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி
ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள ‘கிழப்பாக்கம்’
என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு
ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்
படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழும், வண்ணச் சரபம்
தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளன.

     இங்குள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி விசேஷமானது. இங்கு
சுவாமி  மேற்கு நோக்கியும் அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது
நினைந்து தொழத்தக்கது. முகப்பு வாயிலைக் கடந்ததும் வலப்பால் அம்பாள்
சந்நிதி. அம்பிகை நின்ற திருக்கோலம். எதிரில் கவசமிட்ட கொடிமரம்.
நந்தி, பலிபீடங்கள்.

    ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி வணங்கும்
நிலையும் காணலாம். உள்வாயிலைத் தாண்டி, மண்டபத்தையடைந்தால்
நேரே மூலவர் தரிசனம். கம்பீரமான இலிங்கத் திருமேனி. வெள்ளிக்கவச
மணிவித்துத் தரிசிக்கும் அழகே அழகு.