பக்கம் எண் :

202 திருமுறைத்தலங்கள்


     உற்சவ திருமேனிகளுள் குதிரைச்சொக்கர், சாட்டை பிடித்த நிலையில்
உள்ளது. அழகாகவுள்ளது. நடராசசபை உள்ளது. கருவறை முன்
மண்டபத்தில் வலப்பால் நால்வர் சந்நிதி உள்ளது. இம்மண்டபத்தின் தூண்
ஒன்றில் - இத்தலத்திற்குச் சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து
வந்ததாகச் சொல்லப்படும் ஐதிகம் சிற்பமாக உள்ளது. வெளிப் பிராகாரத்தில்
நவக்கிரகம், பைரவர், சூரியன், இராமர், வீமன் ஆகியோர் வழிபட்ட
சிவலிங்கங்கள் சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

     இங்குள்ள பெருமாள் சந்நிதி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக
விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை சந்நிதிகள்
உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர்
சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக
உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் உள்ளது. பக்கத்தில் உள்ளது
அகத்தியர் வழிபட்ட இலிங்கம்.

     நாடொறும் இருகால பூஜைகளே. வைகாசிப் பெருவிழா, மாசி மகம்,
பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை தீபம்
முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. தேவகோட்டை மு.ராம.அரு. ந.
அருணாசலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார் ஆகியோரின் உதவியால்
1966ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

     கோயிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும்
விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக
நடைபெறுகிறது. தேரடி விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தி - பெரிய
விநாயகர் ; பூஜை நடைபெறுகிறது. கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி
சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச்
சேர்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தில் குருபூஜை நடத்தப் பெறுகிறது.
அருணந்தி சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள்
ஆவார்.

     சமாதிக்குப் பக்கத்தில் வெளியில் ஒரு சிவலிங்கம் உள்ளது.
இவ்வூருக்கு அண்மையில் ‘கிழப்பாக்கம்’ என்றொரு ஊர் உள்ளது. அங்கும்
ஒரு சிவலிங்கம் உள்ளது. சுந்தரரை, இறைவன் முதிய வேதியராகக் காட்சி
தந்து அவ்விடத்திலிருந்து அழைத்து வந்தார் என்றும், இங்குச் சிவலிங்கம்
உள்ள இடத்தில்தான் தன் காட்சியைத் தந்து அருள் புரிந்ததாகவும் ;
இங்கிருந்து கோயிலைப் பார்த்துச் சுந்தரர் தரிசிக்க, அப்போது இறைவன்
கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும்
சொல்லப்படுகிறது. இதற்கேற்ப