பக்கம் எண் :

204 திருமுறைத்தலங்கள்


48/16. வடுகூர்.

ஆண்டார் கோயில், திருவாண்டார் கோயில்.

     நடுநாட்டுத் தலம்.

     இப்பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார் கோயில் என்றாகி இன்று
மக்கள் வழக்கில் “திருவாண்டார் கோயில்” என்று வழங்குகிறது. புதுச்சேரி
மாநில எல்லைக்குட்பட்டது.

     விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி கோலியனூர், கண்டமங்கலம்)
பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனூர் தாண்டி, புதுவை
மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலை யோரத்திலுள்ள
‘திருவாண்டார் கோயிலை’ அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய
உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே
கோயிலும் உள்ளது.

     தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள
கோயில். அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன்
என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டதலமாதலின் வடுகர்
வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது. ஆண்டவனார் கோயில்
என்பது கோயிலுக்குப் பெயர். கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப்
பெயராயிற்று - ஆண்டார் கோயில். ‘திரு’ என்னும் அடைமொழி சேர்ந்து
‘திருஆண்டார் கோயில்’ என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில்
என்றாயிற்று.

     இறைவன் - வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர் நாதர்.
     இறைவி - திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.
     தலமரம் - வன்னி.
     தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இறைவனின் அறுபத்து நான்கு (அஷ்டாஷ்ட) வடிவங்களுள் வடுகக்
கோலமும் ஒன்றாகும். அஷ்டபைரவ மூர்த்தங்களுள் வடுக பைரவக்
கோலமும் அடங்கும். அவையாவன:- 1. அசிதாங்க பைரவர் 2. குரு
பைரவர் 3. சண்டபைரவர் 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர் 7. பீஷணபைரவர் 8. சம்ஹார பைரவர்.