| நடுநாட்டுத் தலம். கடலூரின் ஒரு பகுதி - கடலூர் புது நகர் (கடலூர் N.T.). கடலூர் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையம் உள்ளது. கடலூர் மாவட்டத் தலைநகர். சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி, திண்டிவனம், வேலூர், விருத்தாசலம், திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, திருக்கோயிலூர், சிதம்பம் முதலிய பலவிடங்களிலிருந்தும் இத் தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே லைனைக் கடந்து சென்றால் மிக அருகாமையில் உள்ள கோயிலை அடையலாம். இறைவன் - பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர், கன்னிவனநாதர், சிவக்கொழுந்தீசர், உத்தாரநாதர், கரையேற்றும்பிரான். இறைவி - பிருஹ்ந்நாயகி, பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி. தலமரம் - பாடலம் (பாதிரி). தீர்த்தம் - பிரம தீர்த்தம். (கடல்). சிவகரதீர்த்தம் (கோயிலுக்கு வெளியில் உள்ளது). கெடிலநதி. அகத்தியர் உபமன்யுமுனிவர் வியாக்ரபாதர், கங்கை, அக்கினி முதலியோர் வழிபட்டது. இவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் உள. இத்தலத்திற்கு ; கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை எனப்பல பெயர்களுண்டு. ‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’ என்றாயிற்று என்பது இலக்கியவாணர் கூறும் செய்தியாகும். திருநாவுக்கரசரை - அப்பரை, கல்லிற்பூட்டிக் கடலில் இட்ட போது, “சொற்றுணை வேதியன்” பதிகம் பாடி - ‘நமசிவாய - நற்றுணையாக’, கல்லே தெப்பமாக, வருணன் தன் கைகளால் தாங்கித் திருப்பாதிரிப்புலியூரின் பக்கத்தே அவரைக் கொண்டுவந்து கரைசேர்த்தான். அவ்விடம் தற்போது ‘கரையேறவிட்ட குப்பம்’ - வண்டிப்பாளையம் என்று வழங்குகிறது. (கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பாளையத்திற்கு நகரப் பேருந்து செல்கிறது.) வண்டிப்பாளையத்தில் ‘அப்பர்சாமி குளம்’ என்று கேட்டால் சொல்வார்கள். அவ்விடத்தில் ஒரு குளமும், கரையில் ஒரு சிறிய நான்குகால் மண்டபமும் சாலையோரத்தில் உள்ளன. (குளத்திற்குப் பக்கத்திலுள்ள ஓடைதான் முன்பு கெடிலத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றது). |