பக்கம் எண் :

318 திருமுறைத்தலங்கள்


என்பர். திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலமாதலின்
இதற்கு அரதனபுரம் என்றும் பெயர்.

     இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
     இறைவி - பிரமகுந்தளாம்பாள், வண்டமர்பூங்குழலி
     தலமரம் - வாகை.
     தீர்த்தம் - பிரமதீர்த்தம்

     அர்ச்சுனன், திருமால், வண்டு வழிபட்ட தலம்.

     சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

     கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின்முன் பிரமதீர்த்தம் தாமரைக்
குளமாகக் காட்சி தருகிறது.

     முகப்பு வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் இடப்பால்
வாகைமரம் உள்ளது. வேறு முக்கிய சந்நிதிகள் இல்லை. வௌவால் நெத்தி
மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி. உள் பிராகாரத்தில் விநாயகர்,
சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
நால்வர் சந்நிதி உள்ளது. நடராச சபை தரிசிக்கத் தக்கது.

     கோஷ்டமூர்த்தங்களுள் துர்க்கைச் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமாக
வழிபடப் பெறுகின்றது. நேரே மூலவர் தரிசனம். சற்று உயர்ந்த பாணத்துடன்
கூடிய இலிங்கத் திருமேனி.

     மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இத்தலத்திற்குத் தலபுராணம்
பாடியுள்ளார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இத்திருக்கோயில்
திருப்பணிகள் செய்யப்பட்டு 1-9-1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

     நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறும் இக்கோயிலில்
பெருவிழா நடைபெறவில்லை. கார்த்திகைச் சோமவாரங்கள், நவராத்திரி,
கார்த்திகைத் தீபம் முதலிய சிறப்பு உற்சவங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

     சுமார் 250 ஏக்கர் நிலமிருந்தும் கோயில் நித்திய வழிபாட்டிற்கும்
வசதியின்றித் தவிக்கிறது. இரண்டாண்டுகளாகப் பணியாளர்களுக்கு
ஊதியமில்லை. குருக்களின் முயற்சியால் வழிபாடு நடைபெறுகிறது. திருப்பணி
செய்து காக்கப்படவேண்டிய கோயில். அறநிலையத் துறையின் பார்வை இதன்
மீது என்று படுமோ?