பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 361


     இறைவன் - கோடீஸ்வரர்
     இறைவி - கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி
     தலமரம் - கொட்டை (ஆமணக்கு)ச் செடி
     தீர்த்தம் - அமுததீர்த்தம் (கிணறு)

     அப்பர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். பிராகாரத்தில் விநாயகர்,
முருகன், மகாலட்சுமி சந்நிதிகள். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது.
மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த
மாதிரி காணப்படுகிறது. இத் தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ்
செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ்
செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற்
போகும் என்பதை “கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே” என்னும்
பழமொழியால் அறியலாம். இக் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் உரிய
வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி
தருகின்றன. இத் தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ‘ஏரகரம்’ என்னும் ஊர்
வைப்புத் தலமாகச் சொல்லப்படுகிறது. திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுப்
பணிகள் நடைபெற்று வருகின்றன.

      “கருமணி போல்கண்டத்து அழகன் கண்டாய்
             கல்லால நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
      பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
             பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
      வருமணிநீர்ப் பொன்னி வலஞ் சுழியான் கண்டாய்
             மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
      குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில்
             கோடீச்சரத்து உறையும் கோமான்தானே.”
                                            அப்பர்)

                                       -அயலாம்பன்
      மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளுங்
      கொட்டையூர் உட்கிளருங் கோமளமே.

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கோடீஸ்வரர் திருக்கோயில்
    
கொட்டையூர்
    
மேலக்காவேரி அஞ்சல் - 612 002.
    
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.