பக்கம் எண் :

38 திருமுறைத்தலங்கள்


     இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர், சண்டேசுவரர், சந்திரசேகரர்,
பிரதோஷ  நாயகர்,  நால்வர்  ஆகிய  உற்சவத்  திருமேனிகள் மிகவும்
அழகுடையவை.  அவை  பாதுகாத்து  வைக்கப்பட்டுள்ளன.   கோஷ்ட
மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை
ஆகியோர் உள்ளனர்.


     துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால்
மூலவரைத் தரிசிக்கலாம்.


     மூலவர் - சுயம்புமூர்த்தி, சற்று உயர்ந்த பாணம் - லேசான செம்மண்
நிறத்தில்   காட்சியளிக்கிறது.   பக்கத்தில்  அம்பாள்  உற்சவத்  திருமேனி
வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது.


     இறைவன் - சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
     இறைவி - (இத்தலத்திற்குரிய உற்வச அம்பாளாக) பிரமராம்பிகை
     தீர்த்தம் - இந்திர தீர்த்தம்.


     இப்பகுதியில்  வேப்பமரங்கள்  அடர்ந்திருந்தமையால்   இத்தீர்த்தம்
மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்படுகிறது. இப்பெயரில் உள்ள “பெரிய
வேப்பங்குளம் என்பதே பண்டைய  இந்திர  தீர்த்தமாகும்.  இது  தற்போது
பயன்படுத்தப்படவில்லை.”  “சிறிய வேப்பங்குளம்”   என்பதே    குடிநீர்க்
குளமாகப் பயன்படுகிறது.   முப்பதாண்டுகளுக்கு  முன்பு  சிறிய   அளவில்
குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகச்  சொல்லப்படுகிறது.  தலமரம்  - காரைச்
செடி. தற்போது இல்லை.


     நித்திய பூஜை இருவேளை மட்டுமே நடைபெறுகின்றது. வெள்ளாழஞ்
செட்டியார் மரபைச் சேர்ந்தவர்களே  அறங்காவலர்காளக  நியமிக்கப்பட்டு
நிர்வாகஞ் செய்து வருகிறார்கள்.


  “அன்றாலின் கீழிருந்து அங்கு அறம் புரிந்த அருளாளர்
  குன்றாத வெஞ்சிலையிற்கோளரவ நாண்கொளுவி
  ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
  நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.”


  “புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
  எற்றொளியா அலை புனலோடு இளமதியமேந்து சடைப்
  பெற்று டையாளொரு பாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
  நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.”
                                             (சம்பந்தர்)