பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 385


      சோழநாட்டு (வடகரை)த் தலம்.

      முற்காலத்தில் மழவர் என்னும் பிரிவினர் ஆண்டு வந்த பகுதி
யாதலால் மழவர்பாடி என்று பெயராகி அது பின்பு மழபாடி ஆயிற்று. பாடி-
படைகள் தங்குமிடம். கொல்லிமழவன் என்பவன் இப்பகுதியை ஆண்டு
வந்தபோது அவனுடைய படைகள் - மழவர் சேனை தங்கியிருந்த
இடமாதலின் மழவர் பாடி என்றாகிப் பின்பு மழபாடி ஆயிற்று என்பர்.

      மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இறைவன் மழு ஏந்தி
நடனமாடிக் காட்சி தந்தமையால் இத்தலம் ‘மழுவாடி’ என்று பெயர் பெற்றது.
இதுவே பிற்காலத்தில் மழபாடி என்று வழங்கலாயிற்று என்பது தலபுராணச்
செய்தியாகும்.

      அரியலூரிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும், திருச்சியில்
இருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதியுள்ளது.

    இறைவன் - வைத்தியநாதர், மழுவாடீசுவரர், வைரத்தூண்நாதர்,
               வச்சிரதம்பேஸ்வரர்
    இறைவி - சுந்தராம்பிகை, அழகம்மை பாலாம்பிகை தலமரம் - பனை
    தீர்த்தம் - இலக்குமி தீர்த்தம் (அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ளது.)
             கொள்ளிடம்.
    தலவிநாயகர்- சுந்தர விநாயகர்

    மூவர் பாடல் பெற்ற தலம்.

     திருமுால், இந்திரன் ஆகியோர் வழிபட்டது. நந்திதேவர் திருமணம்
கொண்டதுமான சிறப்புடைய தலம். சுந்தரர் கனவில் இறைவன் “மழபாடி வர
மறந்தனையோ”, என்று உணர்த்திட, அவர் சென்று வழிபட்ட தலம்.
சந்திரனின் களங்கத்தைப் போக்கியதால் வைத்தியநாதர் என்றும், பிரமனின்
சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் சிவலிங்கத்தை எடுத்து வந்து
இங்குப் பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அதை யறிந்த பிரமன் வந்து
அச்சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றபோது முடியாமற் போகவே “இது
வைரத்தூணோ” என்று சொல்லிப் புகழ்ந்ததால் வைரத்தூண் நாதர் என்றும்
வச்சிரதம்பேஸ்வரர் என்றும் இறைவனுக்குப் பெயர்கள் வந்தன.
திருநாவுக்கரசர் பெருமான் தம் பதிகத்தில் “மழபாடி வைரத்தூணே” என்று
பாடிப் போற்றுகின்றார்.

தலம் - 25