பக்கம் எண் :

438 திருமுறைத்தலங்கள்


அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த
மண்டபம். கொடிமரம், பலிபீடம், நந்தி சந்நிதிவிட்டு விலகியவாறு உள்ளன.
சுவாமி சந்நிதிக்குத் தென்பால் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச
சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர்
வரலாற்றுச் சித்திரங்கள் உள்ளன. கருவறையின் தென்பால் தென்கயிலையும்
வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. வாகன மண்டபம்,
மகா மண்டபம் - அர்த்த மண்டபம். மூலவர் தரிசனம்.

     அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. இங்கு
இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல
தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார். கோஷ்ட
மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது.
மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும்
துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும் பூந்துருத்தி காடவ
நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. பெருவிழா நீங்கலாக மற்ற
பிரதான விழாக்களெல்லாம் நடைபெறுகின்றன. வள்ளலாரும் அருண
கிரிநாதரும் இத்தலத்தைப் பாடியுள்ளர்.

   
“எனக்கென்றும் இனியானை எம்மான் தன்னை
         எழிலாரும் ஏகம்பம் மேயான்தன்னை
     மனக்கென்றும் வருவானைவஞ்சர் நெஞ்சில்
         நில்லானை நின்றியூர் மேயான்றன்னைத்
     தனக்குஎன்றும் அடியேனை ஆளாக் கொண்ட
         சங்கரனைச் சங்கவார் குழை யான் தன்னைப்
     புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன்றன்னைப்
         பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன்நானே."  (அப்பர்)

                                           -சீலநிறை
    வாந்துருத்தி கொண்டுள்ளனலெழுப்புவோர் புகழும்
    பூந்துருத்திமேவுசிவ புண்ணியமே.             (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பூந்துருத்தி & அஞ்சல்
     (வழி) கண்டியூர் - 613 103
     திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம்.