‘பட்டி’ பூசித்தது ஆதலின் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது. அம்பிகை தவஞ்செய்ததால் ‘தேவிவனம்’ என்றும் பெயர். கோயிலின் தூண் ஒன்றில் இச்சிற்பம் - பசு பாலைச் சொரிந்து வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. இறைவன் சந்நிதியிலும் இச்சிற்பம் சுதையிலுள்ளது. இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது. விசுவாமித்திரர், பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில்தான். மார்க்கண்டேயர் பூசித்த சிறப்புடையது. இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி இங்கும் இராமலிங்கச் சந்நிதியும் கோடி தீர்த்தமும் உள்ளன. இறைவன் - பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர் இறைவி - ஞானாம்பிகை, பல்வளை நாயகி. தலமரம் - வன்னி தீர்த்தம் - ஞானதீர்த்தம். (கோடி தீர்த்தக் கிணறு) தலவிநாயகர்- அனுக்ஞை விநாயகர், மதவாரணப் பிள்ளையார் சம்பந்தர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய கோயில். நான்கு கோபுர வாயில்களுடன் ஊர் நடுவில் உள்ளது. உட்புகுந்தால் விலகிய நந்தி பலிபீடங்கள் உள்ளன. கோயில் எதிரில் தீர்த்தமுள்ளது. இரண்டாம் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள. உட்புகுந்தால் இங்கும் விலகிய நந்தியைக் காணலாம். அலங்கார மண்டபம் அழகானது. மதவாரணப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அடுத்த சுற்றில் சப்த கன்னியர், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர், மகாலிங்கர், பால முருகன், சண்முகர், இராமலிங்கர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. கோடி தீர்த்தம் கிணறு வடிவில் உள்ளது. அர்த்த மண்டபத்துள் சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயில் தனியே கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மகா மண்டபத்தில் திருப்பணிகளைச் செய்த கோவிந்த தீக்ஷிதரும் அவர் மனைவியும் உளர். இங்குள்ள துர்க்கைக் கோயில் விசேஷமானது. சோழர்காலப் பிரதிஷ்டை. அதுபோலவே இங்குள்ள கற்சிலை பைரவரும் சிறப்புடையது. |