பக்கம் எண் :

476 திருமுறைத்தலங்கள்


143/26. குடமூக்கு

கும்பகோணம்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை,
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல
ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் நிரம்பவுள்ளன. இத்தலம்,
சென்னை - திருச்சி மெயின்லயனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

    “கோயில் பெருத்தது கும்பகோணம்” என்னும் முதுமொழிக்கேற்ப
எண்ணற்ற கோயில்களையுடையது. சைவம் வைணவம் ஆகிய இரு சமயப்
புகழும் கொண்டது. இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும்
மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.
உலகப்புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம்
உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும்
இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில்
நீராடுவர், இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16
சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

    பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன்
தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று
பெயர் பெற்றது. இத்தலத்தில் பதினான்கு கோயில்களும் பதினான்கு
தீர்த்தங்களும் உள்ளன. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன்
கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம்
நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால்
“அமுதசரோருகம்” என்றும் அழைக்கப்படுகிறது.

    மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும்
(கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா,
காவிரி) - நவகன்னியர்களாக வந்து நீராடியதால் ‘கன்னியர் தீர்த்தம்’
என்றும் பெயர் பெற்றது.

    “பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
 
   மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங்கோயில்    (பெ. புரா)