பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 51


     சுந்தரர் பாடல் பெற்ற தலம். இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட
விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன.

     கோயில் கிழக்கு நோக்கியது. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
வெளியில் ராஜகோபுரமில்லை. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.

     கோயிலின்  முகப்பு  வாயிலின்  வெளியில் நிற்கவைத்துள்ள ஒரு
கல்வெட்டு,  ஒவ்வொரு  நாளும்  2  தேசாந்திரிகளுக்கு  அன்னதானம்
செய்வதற்காக  ஓர்  அன்பரால்  நிலம்  விடப்பட்டுள்ள   செய்தியைத்
தெரிவிக்கின்றது.

     முகப்பு வாயில்  உள்நுழைந்ததும்  நேரே  தெரியும்  மூலவர் சந்நிதி
புலஸ்தியர் வழிபட்டதாகும். எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன.
இதற்குப் பக்கத்தில் உள்ளது அகத்தியர்  வழிபட்ட மூலவர். இதற்கு எதிரில்
வாயில் இல்லை. சுவரில் சாளரம்  மட்டுமே  உள்ளது.   இதன்  எதிரிலும்
வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன.

     முன் மண்டபத்தில் வாயிலில் ஒருபுறம் செல்வப் பிள்ளையார் சந்நிதியும்
மறுபுறம் தண்டபாணி சந்நிதியும் உள்ளன.

     உள் வாயிலில் நுழைந்ததும் வலப்பால் சூரியன். அடுத்துள்ள இடத்தில்
வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இடப்பால்  அடுத்தடுத்து  இரு அம்பாள்
சந்நிதிகளும் தெற்கு நோக்கியுள்ளன. இவ்விரு  சந்நிதிகளுக்கும் இடையில்
பள்ளியறை உள்ளது.  இரு  சந்நிதிகளும்  நின்ற  திருக்கோலம்.  நேரே
புலஸ்தியர் வழிபட்ட மூர்த்தியின் சந்நிதி. பக்கத்தில்  உட்புறம்  உள்ளது
அகத்தியர் வழிபட்ட மூர்த்தி. முதலில் அகத்தியர் வழிபட்ட மூர்த்தியைத்
தரிசிக்க வேண்டும். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால்  ஒரு   புறம்
அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
துவார கணபதி உள்ளார். இவ்வாறே அடுத்துள்ள   சுவாமி  சந்நிதியிலும்
புலஸ்தியர் உருவமும் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபா நாதேசுவரரின்
ஆவுடையார் சதுர வடிவினது. தாலபுரீசுவரர் சந்நிதியில் துவாரபாலகர்கள்
உள்ளனர். அடுத்துள்ள கிருபா நாதேசுவரர் சந்நிதியில் துவாரபாலகர்கள்
உருவம் வண்ணத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளது.

     தாலபுரீசுவரரின் முன்னால், இத்திருக்கோயில் திருப்பணியைச் (1929ல்)
செய்வித்த  தேவகோட்டை  நகரத்துச் செட்டியார் - ஏகப்பச் செட்டியாரின்
உருவம் - சுவாமியைக் கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளது.