பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 553


இத்தேன் கூட்டைப் பற்றிச் சொல்லப்படும் செவி வழிச் செய்தி வருமாறு :-
சுபமகரிஷி என்பவர் நாடொறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார்.
ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது.
அதைக் கண்ட ‘சுபர்’ தேன் வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை
வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி
மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது.” தரிசிக்கச் செல்வோர்
அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும்.
ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச்
சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடுகட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் -
சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.

     அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். ஆருத்ரா,
வைகாசி விசாக விழா இங்குச் சிறப்பானவை.

     கல்வெட்டுக்களில் இவ்வூர் “இராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ
வளநாட்டு நாஞ்சில் கோட்டாறான மும்முடிச்சோழ நல்லூர்” என்று
குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் ‘சோழ மண்டலத்து மண்ணி
நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ
கேரள ராசன்” ஆவான். (காலம் கி.பி. 1253) கல்வெட்டில் இறைவனின்
பெயர், “இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்” என்று காணப்
படுகின்றது.

     
“வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
     ஓதிய ஒண் பொருளாகி நின்றான் ஒளியார்கிளி
     கோதிய தண் பொழில் சூழ்ந்தழகார் திருக் கோட்டாற்றுள்
     ஆதியையே நினைந்தேத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.”
                                             (சம்பந்தர்)

                                         - தெள்ளாற்றின்
     “நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
     கோட்டாறு மேவும் குளிர் துறையே.”            (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
     கொட்டாரம் & அஞ்சல் - 609 703
     தஞ்சை மாவட்டம்.