கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் - ஐந்து நிலைகள். உள்ளே விசாலமான இடைவெளி. வலப்புறம் அலங்கார மண்டபம். இடப்புறம் மருதப்பர் சந்நிதி. பிராகாரத்தில் மோக்ஷலிங்கம், காளிகோயில், சிவலோக நாதர் சந்நிதி, யாகசாலை முதலியன உள்ளன. இரண்டாவது கோபுரம் அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் பிராகாரத்தில் வன்மீகநாதர், சோமாசியார், அவர் மனைவி சுசீலை, அறுபத்துமூவர், விநாயகர், சுப்பிரமணியர், மேலே உயரத்தில் சட்டநாதர் சந்நிதி, மகாலட்சுமி, ஈசான ஜ்வரஹர லிங்கங்கள், நவக்கிரகம், நடராச மண்டபம், சனீஸ்வரர், பைரவர், தண்டபாணி முதலிய சந்நிதிகளைத் தொழலாம். நேரே மூலவர் தரிசனம். காளி தன் கையால் பிடித்து வைத்து வழிபட்டதாதலின் மிகச்சிறிய பாணமாகவுள்ளது. பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாகவுள்ளது. அம்பாள் சந்நிதி தனியே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நாடொறும் ஐந்துகால வழிபாடுகள். யாக உற்சவம் மிகவும் ஐதீகமாக வைகாசி ஆயில்யத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று தியாகராஜா வெட்டியான் கோலத்திலும், காட்சி தந்த நாயகர் கோலத்திலுமாக எழுந்தருள்கிறார். அன்று 17 மூர்த்தங்கள் புறப்பாடு மிகச் சிறப்பாக இருக்குமாம். ஆயில்யத்தில் சோமாசிமாறருக்கு அருள்புரிந்த இறைவன் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் மறுநாள் மகநாளில் காட்சி தருவதாகவும் விழா அமைகிறது. உற்சவ மூர்த்தங்களுள் தியாகராஜா, காட்சி கொடுத்த நாயகர், சோமாசிமாறர், அவர் மனைவியார், வில்லேந்திய முருகன், சோமாஸ் கந்தர், காளி கையில் சிவலிங்கம் பிடிக்கும் அமைப்புடன் - முதலியவை தரிசிக்கத்தக்கன. ‘அம்பர்புராணம் - தலபுராணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்கள். (கோயில் சிவாசாரியார் ‘அம்பர்’ ஊரில் குடியிருக்கிறார். அவரே மாகாளத்திற்கும் வந்து பூஜை செய்கிறார்.) “அடையார்புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய விடையார் கொடி எந்தை வெள்ளைப் பிறைசூடும் சடையான் கழல் ஏத்தச் சாரா வினை தானே.” (சம்பந்தர்) |