பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 563


நடந்தே செல்லவேண்டும். கோயில் சாவி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள
செட்டியார் வீட்டில் இருக்கிறது. யாத்திரையாகச் செல்வோர் முன்பே கடிதம்
எழுதிவிட்டு, அக்காலத்தில் சென்றால்தான் தரிசிக்க முடியும். இல்லையெனில்
நாம் செல்லும் நேரத்தில் செட்டியார் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தால்
சிரமப்பட்டுச் சென்றும் தரிசிக்க முடியாமற்போய்விடும். கோயில் குருக்கள்
பக்கத்து ஊரிலிருந்து வந்து பூஜை செய்துவிட்டுப் போகிறார்.)

     2) திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை சாலையில் வருவோர்
பூந்தோட்டம் ஊருக்குள் செல்லாமல் முன்பாகவே (அரிசிலாற்றுப் பாலத்திற்கு
முன்னால்) இடப்புறமாகச் செல்லும் கும்பகோணம் நாச்சியார் கோயில்
சாலையில் சென்று கூத்தனூரையடைந்து மேலே சொல்லியவாறு
சென்றடையலாம்.

     இராமலட்சுமணர்கள் தம் தந்தையாகிய தசரதனுக்கும் சடாயுவுக்கும்
திலதர்ப்பணம் (திலம் - எள்) செய்த தலமெனத் தலபுராணம் சொல்கிறது.
இச்சிற்பம் கோயிலில் பிராகாரத்தில் உள்ளது. சூரியன், சந்திரன், யானை,
சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் வழிபட்ட தலம்.

      இறைவன் - முத்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
      இறைவி - சுவர்ணவல்லி, பொற்கொடிநாயகி     
      தலமரம் - மந்தாரை     
      தீர்த்தம் - சந்திர தீர்த்தம் (வெளியே பக்கத்தில் உள்ளது.)
               அரிசிலாறு

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     சிறிய கோயில் - கிழக்கு நோக்கிய சந்நிதி. இரும்புக் கம்பிகளாலான
கதவையுடைய முகப்பு வாயில். உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி,
உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம்.
வலப்பால் அம்பாள் சந்நிதி. பிராகாரத்தில் விநாயகர், இராம இலக்குவர்கள்
திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர்,
கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர், தேவியருடன்
பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

     கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா,
துர்க்கை உள்ளனர். கோயிலுக்கு எதிரில் உள்ள சிறிய சந்நிதியைத் தவறாமல்
தரிசிக்க வேண்டும். இது ஆதி விநாயகர் சந்நிதி எனப்படுகிறது. இங்கு
விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து,
இடக்கையை இடக்காலின்மீது வைத்து,