வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. தீர்த்தக் கிணற்று நீர் சுவையாக உள்ளது. மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி, மகாவிஷ்ணு பூசித்தது, வழிபடுங்கால் உள்ளத்தில் ஒருவித மனநிறைவு உண்டாகின்றது. முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். நகரத்தார் இக்கோயிலை அற்புதமாகக் கற்கோயிலாகக் கட்டியுள்ளனர். கார்த்திகைச் சோமவாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர்ச் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்பெறுகின்றது. நடராசப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார். இங்குள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி - தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால் - வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. குபேரன் பூசித்த வரலாறு வருமாறு : ஒருமுறை இராவணன், தூய்மையற்றவனாய் இறைவனை வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் வடக்குப் பிராகாரத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த சுலோகத்தைப் படித்தான். மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து - ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து - மன்னன் வாள் கொண்டு அரியும் போது - குழந்தை, அன்னை சிங்கார வல்லியை |