பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 589


மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின்முத்திரையும், இடக்கையில்
சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகிறது.

     (2) லிங்கோற்பவர் - பச்சைக்கல்லால் ஆனது. மான் மழுவேந்தி,
அபயகரமாகவும் கடிஹஸ்தமாகவும் உள்ளது. பாதத்தில் திருமால் மகுட
மணிந்த வராகமாகவும் மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும் பிரமனும்
(சுமார் 2 அடி உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர்.

     (3) அர்த்தநாரி வடிவம் (4 அடி உயரம் புடைப்புசிற்பம்) இடக்காலூன்றி,
வலக்காலை ஓய்வாக நிறுத்தி, விடைமேற் சாய்ந்து வலதுமேற்கையில் மழுவும்
இடதுமேற்கையில் தாமரையும் கொண்டு, வலக்கையை காளை தலைமீது
வைத்தும்,. இடக்கையைத் தொடையில் ஊன்றியும் (காளை பின்னால் நிற்க)
காட்சி தருகின்றார்.

     (4) தபஸ்வியம்மன் (புடைப்புச்சிற்பம்) மிகவும் அழகானது. வலக்கால்
தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி
மேல்நோக்கிய நின்றநிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை
கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத்
தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது அழகாகவுள்ளது.

     இக்கோயில் இராசராசனுக்கு முன்பே கற்கோயிலாகக் கட்டப்பட்டது.
எனினும் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாங் குலோத்துங்க
மன்னனாலும், மீண்டும் 16 (அ) 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாய்க்க
மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். கீழ்ப்பால் உள்ள
மண்டபத்தில் ஒரு தூணில் உள்ள மனித வடிவம் மூன்றாம்
குலோத்துங்கனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

     (கோயில் குருக்கள் வீடு சிவபுரத்தில் உள்ளது. எனவே முன்கூட்டியே
கடிதம் எழுதித் தெரிவித்துவிட்டுத் தரிசனத்திற்குச் செல்வது நல்லது.)

    
 “தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன்
          தாமரையோன் தலை கலனாக் காமரமுன்பாடி
     உண்பலி கொண்டுழல் பரமன் உறையும் ஊர் நிறைநீர்
          ஒழுகுபுனல் அரிசிலின் கலய நல்லூரதனை
     நண்புடைய நன் சடையன் இசைஞானி சிறுவன்
          நாவலர் கோன் ஆரூரன் நாவில் நயந்துறை செய்
     பண்பயிலும் பத்துமிவை பத்தி செய்து பாட
          வல்லவர்கள் அல்லலொடும் பாவம் இலர்தாமே."  (சுந்தரர்)