| சோழநாட்டு (தென்கரை)த் தலம். நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார பாடசாலை உள்ளது. இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உயிர்கள் இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்த ஊர். எனவே திருப்புகலூர் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பர். இத்தலத்திற்குப் புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன வேறு பெயர்கள். திருநாவுக்கரசு நாயனார் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்த பெருமையுடைய தலம். முருகநாயனார் அவதாரத் தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக மாற்றித் தந்தருளிய தலம். அக்கினி, பாரத்வாஜர் முதலியோர் வழிபட்டது. இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது. இத்திருமடம் தற்போது ஆதீனமுள்ள இடமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இறைவன் - அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் இறைவி - சூளிகாம்பாள், கருந்தார்குழலி தலமரம் - புன்னை தீர்த்தம் - அக்கினி தீர்த்தம் மூவர் பாடல் பெற்ற தலம். சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட பெரிய கோயில். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. உள்கோபுரம் மூன்று நிலைகள். உள்ளே நுழைந்ததும் பிரதான விநாயகர். உள்ளே வலப்பால் அம்பாள் சந்நிதி - தெற்கு நோக்கி. வெளிப்பிராகாரத்தில் சிந்தாமணியீஸ்வரர், நர்த்தன விநாயகர், பாரத்வாசர் வழிபட்ட லிங்கம், அப்பர் ஐக்கிய சிற்பம் முதலிய சந்நிதிகள் உள. உள் பிரகாரத்தில் அக்கினி, அறுபத்துமூவர், பஞ்சலிங்கங்கள், அப்பர் சந்நிதி, வாதாபி விநாயகர், சுப்பிரமணியர், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள், மகாலட்சுமி, சனீஸ்வரன், நளன், நவக்கிரகம், கலைமகள், அன்னபூரணி, காலசம்ஹாரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. |