உள்ளன. நடராச சபை உள்ளது. நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. திண்டி, முண்டி எனும் துவாரபாலகர்களைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் - கணபதீச்சரமுடையார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனி கொண்டுள்ளார். இவருக்கு நாடொறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப் பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகதலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை), துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசர் சந்நிதி எதிரிலுள்ளது. கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த ஐதீகவிழா நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர் உத்ராபதீஸ்வரர் திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் ‘வேண்டும் விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். உற்சவகாலங்களில் வீதி உலாவரும் நாதர் உத்தராபதியாரே. (வடநாட்டுப் பைரவ கோலத்தில் வந்த பெருமான்) உத்தராபதியார் திருமேனி உருவான விதம் பற்றிச் சொல்லப்படும் வரலாறு :- ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாள்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்தராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், “இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவோம்” என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்தராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்ப்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்கக் கட்டளை யிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். |