பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 619


     சித்திரையில் பெருவிழா, இவ்விழாவில் ஆறாம் நாள் திருவிழா
விடந்தீர்த்த ஐதீகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டிமகன், செட்டிப் பெண்
திருக்கல்யாணமாகவும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அம்பாள் சந்நிதிக்கு
எதிரில் உள்ள தெற்கு வீதியின் கோடியில் விடந்தீர்த்த விநாயகர் கோயில்
உள்ளது. பக்கத்தில் உள்ள மடமே வணிகன், செட்டிப்பெண் படுத்துறங்கிய
இடம். இங்கு விஷம் தீர்ந்ததால் இங்குள்ள பிள்ளையார் ‘விடந்தீர்த்த
பிள்ளையார்’ என்ற பெயருடன் விளங்குகிறார். இதனால் இன்றும்
அவ்வீதியில் பாம்பைக் காண்பது அரிது என்றும், பாம்பு கடிப்பது இல்லை,
கடித்து இறப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

     விடந்தீர்த்த விநாயகரின் இருபுறமும் உள்ள விநாயகர்கள், சீராளன்
(சிறுத்தொண்டரின் மகனார்) வழிபட்டவை என்று சொல்லப்படுகிறது. முன்பு
மடமாக இருந்த இடத்தில் தற்போது அலுவலகம் உள்ளது. இப்பகுதிதான்
சீராளர் படித்த இடம் என்றும், இதன்பின் உள்ள குளம், சீராளன் குளம்
என்றும் அழைக்கப்படுகிறது.

     (இத்தல வரலாற்றில் வரும் ‘வைப்பூர்’ என்பது காவிரிப்பூம்
பட்டினத்தையடுத்துள்ள ஊரேயாகும் என்பர்.) அருகாமையில் உள்ள தலம்
திருச்செங்காட்டங்குடி.

     
“சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
     விடையாய் எனுமால் வெருவா விழுமால்
     மடையார் குவளை மலரும் மருகல்
     உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே.”      (சம்பந்தர்)

     “பெருகலாந்தவம் பேதமை தீரலாம்
     திருகலாகிய சிந்தை திருத்தலாம்
     பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
     மருகலானடி வாழ்த்தி வணங்கவே.”            (அப்பர்)

                                        - “ஏச்சகல
     விண்மருவினோனை விடநீக்க நல்லருள்செய்
     வண்மருகன் மாணிக்க வண்ணனே.”        (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
     திருமருகல் & அஞ்சல் - 609 702
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.