பக்கம் எண் :

656 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - கோணேசுவரர்.
     இறைவி - பெரியநாயகி.
     தலமரம் - வாழை.
     தீர்த்தம் - அமிர்ததீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.
     இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

     பேருந்துச் சாலையை அடுத்துக் கோயில் உள்ளது. மேற்கு நோக்கிய
சந்நிதி. கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. ராஜகோபுரமில்லை.
முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள்
வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

     உள்நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து
விநாயகர் சந்நிதி, பலிபீடம் நந்தி உள்ளன. இடப்பால் பெரிய நாயகி சந்நிதி
உள்ளது - தெற்கு நோக்கியது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலம்.
உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் இடும்பன்,
தண்டபாணி, கலைமகள் சந்நிதிகள் உள்ளன. கஜலட்சுமி சந்நிதியை
அடுத்துள்ள குடவாயிற் குமரன் சந்நிதி மிகவும் சிறப்புடையது. வெள்ளிக்
கவசத்தில் தரிசிக்கும் அழகே அழகு. நவக்கிரக சந்நிதி, பைரவர், சனீசுவரர்
முதலிய சிலாரூபங்கள் வரிசையாகவுள்ளன. சப்தமாதாக்கள் உள்ளனர்.

     சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. நடராசசபை அழகானது.
நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது.
பெருமானின் திருமேனியில் பீடத்தில் 10 - 11 ஆம் நூற்றாண்டு
எழுத்தமைதியில் “களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்” என எழுதப்
பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில் இருகரங்கூப்பிய
அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது.

     இராசராச சோழனின் காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி
இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த
‘மாலைதாழ் மார்பன்’ என்பவரால் வடித்து வழங்கப்பட்டதென அறிகிறோம்.
சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத்
திருமேனி செம்மண் நிறத்தினது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே
சென்றால் மூலவரை - கோணேசுவரரைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய
சந்நிதி. பெரிய சிவலிங்கத் திருமேனி, மனநிறைவான தரிசனம். கம்பீரமான
தோற்றம் - திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.