மக்கள் வழக்கில் ‘கோயில் வெண்ணி’ என்று வழங்குகிறது. பழைமையான ஊர். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார், புறநானூற்றுப் பாட்டில் கரிகாற் சோழனின் வெண்ணிப் போரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ‘வென்றியூர்’ என்பது ‘வெண்ணியூர்’ என்று வழங்கி, ‘வெண்ணி’ என்று சுருங்கியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. கரும்பு, நந்தியாவர்த்தக் காடுகளாக இருந்த இவ்விடத்தில் இருமுனிவர்கள் தமக்குள் மாறுபட்டுக் கூச்சலிட, அவ்வழியே வந்த முசுகுந்தன் அதுகேட்டு, வந்து, இருவரையும் சாந்தப்படுத்தி, சுவாமி இருப்பதறிந்து கோயில் எடுப்பித்தான் என்பர். இறைவன் - வெண்ணிக் கரும்பேஸ்வரர், வெண்ணிநாதர். (இப்பெயருக்கு ஏற்ப சிவலிங்கம், கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்து வைத்துள்ளது போலவுள்ளது.) இறைவி - சௌந்தர நாயகி தலமரம் - நந்தியாவர்த்தம் தீர்த்தம் - சூரிய, சந்திர தீர்த்தங்கள். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் சூரிய தீர்த்தம் - குட்டை போல் உள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் பழைமையானக் காட்சியளிக்கின்றது. உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை ஆகியோர் உளர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சுவாமியையும் அம்பாளையும் ஓரிடத்திலிருந்து ஒருசேரத் தரிசிக்கும் அமைப்பு உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியது. அம்பாள் தெற்கு நோக்கியது. கருவறை அகழி அமைப்புடையது. துவாரபாலகர்களைக் கடந்து, துவாரகணபதியை வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூவலர் - சுயம்பு - சதுர ஆவுடையார். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் நடராசசபை உள்ளது. தலப்பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், இருபுறமும் துவாரபாலகியர் உருவங்கள் கதையில் உள்ளன. அம்பாளுக்குப் பிரார்த்தனையாக வளையல்களைக் கோர்க்கும் பழக்கம் இங்குள்ளது. இவ்வாறு வளையல்களைக் கோர்த்துள்ள ஒருகழி சந்நிதிக்கு |